ஐ.சி.சி. வருடாந்திர தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து முதலிடத்தில் நீடிப்பு


ஐ.சி.சி. வருடாந்திர தரவரிசை: இந்தியா, இங்கிலாந்து முதலிடத்தில் நீடிப்பு
x
தினத்தந்தி 2 May 2019 10:12 PM GMT (Updated: 2 May 2019 10:12 PM GMT)

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வருடாந்திர தரவரிசை பட்டியலை ‘அப்டேட்’ செய்து நேற்று வெளியிட்டது.

துபாய்,

தரவரிசை கணக்கீட்டில் 2015-16-ம் ஆண்டு தொடரின் முடிவுகள் நீக்கப்பட்டன. இதே போல் 2016-17, 2017-18 ஆண்டு நடந்த போட்டிகளின் முடிவுகள் 50 சதவீதமும், நடப்பு சீசன் போட்டிகள் முழுமையாகவும் கணக்கில் கொள்ளப்படும். இதன் அடிப்படையில் தரவரிசையில் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

வருடாந்திர தரவரிசைக்கு முன்பாக டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது. தற்போது 2015-16-ம் ஆண்டின் முடிவுகள் நீக்கப்பட்டதன் மூலம் இந்தியா 3 புள்ளிகளை (அந்த சமயத்தில் தென்ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை தொடரை வென்று இருந்தது) இழந்துள்ளது. இருப்பினும் 113 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. நியூசிலாந்து 3 புள்ளி கூடுதலாக பெற்று 111 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும் (108 புள்ளி), இங்கிலாந்து 4-வது இடத்திலும் (105 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் (98 புள்ளி) உள்ளன.

ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து (123 புள்ளி) முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2-வது இடத்தில் இந்தியாவும் (121 புள்ளி), 3-வது இடத்தில் தென்ஆப்பிரிக்காவும் (115 புள்ளி), 4-வது இடத்தில் நியூசிலாந்தும் (113 புள்ளி), 5-வது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (109 புள்ளி) உள்ளன. இங்கிலாந்து அணி உலக கோப்பைக்கு ‘நம்பர் ஒன்’ அந்தஸ்துடன் செல்ல வேண்டும் என்றால் அயர்லாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி ஆட்டத்தில் வெற்றி பெறுவதோடு, அதைத் தொடர்ந்து நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரை குறைந்தது 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியாக வேண்டும்.

Next Story