பித்தலாட்டம் செய்தது அம்பலம்: உண்மையான வயதை வெளிப்படுத்தினார், அப்ரிடி


பித்தலாட்டம் செய்தது அம்பலம்: உண்மையான வயதை வெளிப்படுத்தினார், அப்ரிடி
x
தினத்தந்தி 2 May 2019 10:30 PM GMT (Updated: 2 May 2019 10:30 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி தனது உண்மையான வயதை வெளிப்படுத்தினார்.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி 1996-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அந்த ஆண்டில் அக்டோபர் மாதம் நைரோபியில் நடந்த இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். அப்போது அவரது வயது 16 ஆண்டு 217 நாட்கள் என்று சாதனை புத்தகத்தில் பதிவானது. ஆனால் அவரை பார்ப்பதற்கு இளம் வீரர் போல் அல்ல, வயது அதிகமாக இருக்கும் என்று அப்போது விமர்சிக்கப்பட்டது. அவரது வயது குறித்து அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவது வாடிக்கையாகும். இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற பிறகு அவர் தனது உண்மையான வயதை முதல்முறையாக வெளிப்படுத்தியுள்ளார். வயதில் குளறுபடி இருந்ததை ஒப்புக் கொண்டு இருக்கிறார். ‘கேம் சேஞ்சர்’ என்ற பெயரில் அப்ரிடி சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில், ‘37 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தபோது எனது வயது 19. மற்றவர்கள் சொல்வது போல் 16 வயது அல்ல. நான் 1975-ம் ஆண்டு பிறந்தேன். அதிகாரிகள் எனது வயதை தவறாக எழுதிவிட்டார்கள்’ என்று கூறியுள்ளார். ஆனால் பிறந்த தேதி, மாதம் விவரத்தை சொல்லவில்லை. இந்த நாள் வரை ‘கிரிக்இன்போ’ வீரர்களின் பயோடேட்டாவில் அப்ரிடியின் பிறந்த தேதி 1980-ம் ஆண்டு மார்ச் 1 என்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பிறந்த ஆண்டு 1975 என்பது உண்மை என்றால் அப்ரிடி 37 பந்துகளில் சதம் அடித்த போது அவரது வயது 21 ஆக இருந்திருக்கும். 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக கடைசியாக 20 ஓவர் போட்டியில் ஆடினார். அப்போது அவரது வயது 36 என்று கூறப்பட்டது. வயது பித்தலாட்டத்தை சரி செய்து பார்த்தால், அச்சமயம் அவரது வயது 40 அல்லது 41 ஆக இருந்திருக்கும். அப்ரிடியின் வயது விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தான் முன்னான் கேப்டனான அப்ரிடி 27 டெஸ்ட், 398 ஒரு நாள் போட்டி மற்றும் 99 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியிருக்கிறார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனைக்கு (351 சிக்சர்) அப்ரிடி சொந்தக்காரர் ஆவார்.

Next Story