கல்வி உதவிக்காக பெண்களிடம் ‘ஷேவிங்’ செய்த தெண்டுல்கர்


கல்வி உதவிக்காக பெண்களிடம் ‘ஷேவிங்’ செய்த தெண்டுல்கர்
x
தினத்தந்தி 4 May 2019 11:48 PM GMT (Updated: 4 May 2019 11:48 PM GMT)

கல்வி உதவிக்காக பெண்களிடம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் ‘ஷேவிங்’ செய்து கொண்டார்.

புதுடெல்லி,

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்ற கிராமத்தை சேர்ந்த நேகா, ஜோதி ஆகிய இரு இளம்பெண்கள் அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார்கள். இவர்களது தந்தை 2014-ம் ஆண்டில் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியதால் தந்தையின் தொழிலை இவர்கள் செய்ய வேண்டிய நிலை உருவானது. ஆரம்பத்தில் இவர்களிடம் ஆண்கள் முடி வெட்டவோ அல்லது முகச்சவரம் (ஷேவிங்) செய்யவதற்கோ தயங்கினர். போக போக நிலைமை சரியானது. நேகாவும், ஜோதியும் வேலை பார்த்து கொண்டே கல்வியை தொடருகிறார்கள். தந்தையின் மருத்துவ செலவையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த பெண்களின் கல்வி உதவிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவர்களிடம் ‘ஷேவிங்’ செய்து கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. இந்த புகைப்படத்தை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள தெண்டுல்கர், ‘எனது வாழ்க்கையில் இதற்கு முன்பு நான் மற்றொருவரிடம் ‘ஷேவிங்’ செய்தது கிடையாது. அச்சாதனை இப்போது உடைக்கப்பட்டு விட்டது. அந்த சலூன்கடை பெண்களை நேரில் சந்தித்ததை பெருமையாக கருதுகிறேன்’ என்று கூறியுள்ளார். அந்த நிறுவனம் சார்பில் இவர்களின் கல்விக்கும், தொழிலுக்கும் தேவையான உதவிகளையும் தெண்டுல்கர் வழங்கினார்.


Next Story