லீக் சுற்று முடிவுக்கு வருகிறது: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்


லீக் சுற்று முடிவுக்கு வருகிறது: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று 2 ஆட்டங்கள்
x
தினத்தந்தி 4 May 2019 11:59 PM GMT (Updated: 2019-05-05T05:29:33+05:30)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்றின் கடைசி நாளான இன்று சென்னை-பஞ்சாப், மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

மொகாலி,

சென்னை-பஞ்சாப்

8 அணிகள் இடையிலான 12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறி விட்டன. பிளே-ஆப் சுற்றை எட்டும் 4-வது அணி எது என்ற இழுபறிக்கு லீக் சுற்றின் கடைசி நாளான இன்று தான் விடைகிடைக்கும்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு மொகாலியில் நடக்கும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் மோதுகின்றன. வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் உத்வேகத்தில் உள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்யும் ஆவல் கொண்டுள்ளது. அது மட்டுமின்றி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஐ.பி.எல். வரலாற்றில் அது சென்னை அணியின் 100-வது வெற்றியாக பதிவாகும். கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோர் பேட்டிங்கில் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாஹர், இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா மிரட்டுகிறார்கள். ஏற்கனவே பஞ்சாப்பை சொந்த ஊரில் புரட்டியெடுத்த சென்னை அணி அதே நம்பிக்கையுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.

5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்துள்ள பஞ்சாப் அணி இந்த முறை பஞ்சராகி விட்டது. ஒரு வேளை கடைசி லீக்கில் இமாலய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சில முடிவுகள் சாதகமாக அமைந்தால் அதிசயம் நிகழலாம். ஆனால் அது சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்துள்ள பஞ்சாப் அணியினர் உள்ளூரில் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்குடன் களம் காணுவார்கள்.

மும்பை-கொல்கத்தா

இரவு 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன. இந்த சீசனின் இறுதி லீக் ஆட்டம் இது தான். மும்பை அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. கொல்கத்தா அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் அடுத்த சுற்றை எட்டலாம். தோற்றால் வெளியேற வேண்டியது தான். ஏனெனில் ரன்ரேட்டில் ஐதராபாத் வலுவாக உள்ளது. ஆந்த்ரே ரஸ்செல் (52 சிக்சருடன் 510 ரன்), சுப்மான் கில் (287 ரன்), கிறிஸ் லின் (364 ரன்), கேப்டன் தினேஷ் கார்த்திக் (250 ரன்) ஆகிய அதிரடி சூரர்கள் சரியான நேரத்தில் பார்முக்கு வந்திருப்பது கொல்கத்தா அணிக்கு உற்சாகம் அளிக்கிறது.

அது மட்டுமின்றி கேப்டன் தினேஷ் கார்த்திக்கும், இப்போது தான் கேப்டன் போல் நடந்து கொள்கிறார். பஞ்சாப்புக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் போது வீரர்களை அழைத்து தினேஷ் கார்த்திக் கடுமையாக திட்டினார். ‘பந்து வீச்சாளர்களும், பீல்டர்களும் நடந்து கொண்ட விதம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அந்த நேரத்தில் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவே அழைத்து பேசினேன். வீரர்களிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளியாகுவதற்கு கோபத்தை காட்டுவது அவசியம் என்று தோன்றினால் அதை செய்ய தயங்கமாட்டேன்’ என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.

கடந்த 28-ந்தேதி இவ்விரு அணிகளும் கொல்கத்தாவில் சந்தித்த போது கொல்கத்தா அணி 232 ரன்கள் குவித்து இந்த சீசனில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்து பிரமிக்க வைத்தது. அதற்கு சுடச்சுட பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் வரிந்து கட்டுவார்கள்.

ஹர்திக் பாண்ட்யா (373 ரன்), குயின்டான் டி காக் (462 ரன்), கேப்டன் ரோகித் சர்மா (331 ரன்), குருணல் பாண்ட்யா, பொல்லார்ட் என்று மும்பை அணியிலும் தடாலடி பேட்ஸ்மேன்களுக்கு பஞ்சமில்லை. அதனால் இந்த ஆட்டத்தில் நிச்சயம் அனல் பறக்கும்.


Next Story