கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி + "||" + IPL Cricket: Mumbai Indians win by 9 wickets

ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்: 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றிபெற்றது. #MIvKKR
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கொல்கத்தாவை விரட்டியடித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு உயர்ந்தது.

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறிய 56-வது மற்றும் கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்சும், கொல்கத்தா நைட் ரைடர்சும் மல்லுகட்டின.


இதில் ‘வெற்றி பெற்றால் உள்ளே, தோற்றால் வெளியே’ என்ற வாழ்வா-சாவா நெருக்கடியுடன் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கிறிஸ் லின்னும், சுப்மான் கில்லும் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் (6.1 ஓவர்) எடுத்து அருமையான தொடக்கத்தை உருவாக்கி தந்தும், மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். சுப்மான் கில் 9 ரன்னிலும், கிறிஸ் லின் 41 ரன்னிலும் (29 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) வெளியேறினர்.

அடுத்து வந்த ராபின் உத்தப்பா ரன் எடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டார். மெக்லெனஹான் ஓவரை மெய்டனாக்கினார். 7-வது ஓவரில் இருந்து 11-வது ஓவருக்குள் அந்த அணி வெறும் 12 ரன் மட்டுமே எடுத்து தள்ளாடியது. கேப்டன் தினேஷ் கார்த்திக்கும் (3 ரன்), அதிரடி சூரர் ஆந்த்ரே ரஸ்செல்லும் (0) தாக்குப்பிடிக்கவில்லை. அவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் மலிங்கா காலி செய்தார். கடைசி கட்டத்தில் நிதிஷ் ராணா (26 ரன், 13 பந்து, 3 சிக்சர்) அந்த அணிக்கு சற்று ஆறுதல் அளித்தார். தட்டுத்தடுமாறி ஆடிய உத்தப்பா 40 ரன்களில் (47 பந்து) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார்.

20 ஓவர்களில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. மும்பை தரப்பில் மலிங்கா 3 விக்கெட்டுகளும், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றியை சுவைத்தது. குயின்டான் டி காக் 30 ரன்னில் கேட்ச் ஆனார். கேப்டன் ரோகித் சர்மா 55 ரன்களுடனும் (48 பந்து, 8 பவுண்டரி), சூர்யகுமார் யாதவ் 46 ரன்களுடனும் (27 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.

9-வது வெற்றியை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. 8-வது தோல்வியை தழுவிய கொல்கத்தா அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டியது.

முதலாவது தகுதி சுற்றில் சென்னை-மும்பை அணிகள் நாளை மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது. டாப்-4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

நாளை (செவ்வாய்கிழமை) சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் (இரவு 7.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். தோற்கும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

8-ந்தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) 3-வது, 4-வது இடங்களை பெற்ற டெல்லி-ஐதராபாத் அணிகள் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி காணும் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோல்வி கண்ட அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 10-ந்தேதி சந்திக்கும். சாம்பியன் பட்டத்துக்கான இறுதிப்போட்டி 12-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

ஐதராபாத்துக்கு அதிர்ஷ்டம்

கடைசி லீக்கில் கொல்கத்தா அணி மும்பையிடம் உதை வாங்கியதால், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்த சுற்று(பிளே-ஆப்) அதிர்ஷ்டம் கிட்டியது. லீக் சுற்று முடிவில் ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப் அணிகள் தலா 12 புள்ளிகளுடன் சமநிலை வகித்தன. இருப்பினும் ரன்-ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி (ரன்ரேட் +0.577) 4-வது அணியாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் 12 புள்ளியுடன் ஒரு அணி அடுத்த சுற்றை எட்டுவது இதுவே முதல் முறையாகும். அது மட்டுமின்றி புள்ளி பட்டியலில் 4 முதல் 8-வது இடங்களை வகிக்கும் அணிகளுக்கு இடையே வெறும் ஒரு புள்ளி மட்டுமே வித்தியாசம் இருப்பது இன்னொரு ஆச்சரியமாகும்.