ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை


ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை
x
தினத்தந்தி 5 May 2019 11:15 PM GMT (Updated: 5 May 2019 8:08 PM GMT)

ஒரு நாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடி 365 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜான் கேம்ப்பெல், விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் இருவரும் இணைந்து புதிய அத்தியாயம் படைத்தனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் (47.2 ஓவர்) திரட்டி மலைக்க வைத்தனர். 48 ஆண்டு கால ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். இதற்கு முன்பு பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஜோடி கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனை முறியடிக்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்த அளவில் பார்த்தால் இது, வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல்-சாமுவேல்ஸ் கூட்டணி 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் எடுத்த சாதனைக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது.

தனது முதலாவது சதத்தை எட்டிய ஜான் கேம்ப்பெல் 179 ரன்களும் (137 பந்து, 15 பவுண்டரி, 6 சிக்சர்), 5-வது சதத்தை நிறைவு செய்த ஷாய் ஹோப் 170 ரன்களும் (152 பந்து, 22 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒரே இன்னிங்சில் 150 ரன்களுக்கு மேல் எடுப்பது இதுவே முதல் நிகழ்வாகும். இச்சாதனையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 381 ரன்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய அயர்லாந்து அணி 34.4 ஓவர்களில் 185 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.


Next Story