பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் மந்தனா அணி வெற்றி


பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் மந்தனா அணி வெற்றி
x
தினத்தந்தி 6 May 2019 10:45 PM GMT (Updated: 6 May 2019 10:12 PM GMT)

பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மந்தனா அணி வெற்றிபெற்றது.

ஜெய்ப்பூர்,

பெண்கள் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னோட்டமாக நடத்தப்படும் பெண்கள் 20 ஓவர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று தொடங்கியது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர் நோவாஸ், மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ், மிதாலி ராஜ் தலைமையிலான வெலா சிட்டி அணிகள் மோதுகின்றன. இந்திய வீராங்கனைகளுடன் வெளிநாட்டினரும் இடம் பெற்றுள்ள இந்த அணிகள் ஒவ்வொன்றும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்த போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் டிரைல் பிளாசர்ஸ்-சூப்பர் நோவாஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த சூப்பர் நோவாஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரைல் பிளாசர்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மந்தனா 90 ரன்னும் (67 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன்), ஹர்லீன் டியோல் 36 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சூப்பர் நோவாஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்களே எடுத்தது. இதனால் மந்தனா தலைமையிலான டிரைல் பிளாசர்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் (34 பந்துகளில் 8 பவுண்டரியுடன்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். நாளை நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் டிரைல் பிளாசர்ஸ்-வெலா சிட்டி அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story