‘கொல்கத்தா அணிக்குள் ஒற்றுமை இல்லை’ - உதவி பயிற்சியாளர் கேடிச் ஒப்புதல்


‘கொல்கத்தா அணிக்குள் ஒற்றுமை இல்லை’ - உதவி பயிற்சியாளர் கேடிச் ஒப்புதல்
x
தினத்தந்தி 6 May 2019 11:15 PM GMT (Updated: 6 May 2019 10:32 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை என்பதை உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச் ஒப்புக் கொண்டார்.

மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 56-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை சாய்த்து முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இந்த ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. நட்சத்திர வீரர்களான கேப்டன் தினேஷ் கார்த்திக் (3 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (0) சோபிக்கவில்லை. ஆமை வேகத்தில் ஆடிய ராபின் உத்தப்பா 40 ரன்கள் (47 பந்து) எடுத்தார். தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.1 ஓவர்களில் இலக்கை எட்டியது. கேப்டன் ரோகித் சர்மா அரைசதம் (55 ரன்) விளாசினார்.

தோல்வியின் மூலம் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 வெற்றி, 8 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 5-வது இடத்தை பெற்றது. தோல்விக்கு பிறகு கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறுகையில், ‘நல்ல தொடக்கம் கிடைத்தும் முதல் 6 ஓவர்களுக்கு பிறகு உத்வேகத்தை இழந்து விட்டோம். ஆந்த்ரே ரஸ்செல்லை முன்வரிசையில் இறக்கி பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டத்தை எதிர்பார்ப்பது நியாயமற்றது. இந்த ஆட்டத்தில் ஜொலிக்காவிட்டாலும் இந்த தொடர் முழுவதும் அற்புதமாக (52 சிக்சருடன் 510 ரன்) ஆடியிருக்கிறார். இந்த சீசன் எங்களுக்கு நன்றாக அமையவில்லை. நிறைய பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அடுத்த ஆண்டில் நிச்சயம் இன்னும் வலுவான அணியாக மீண்டு வருவோம்’ என்றார்.

சமீபத்தில் கொல்கத்தா அணிக்குள் ஒருங்கிணைப்பு இல்லை என்பது அம்பலமானது. அணி நிர்வாகத்தின் சில முடிவுகள் மெச்சும்படி இல்லை, சரியான நேரத்தில் சரியான பவுலர்களை பயன்படுத்தி இருந்தால் சில ஆட்டங்களில் வெற்றி கிடைத்திருக்கும் என்றெல்லாம் ஆல்-ரவுண்டர் ஆந்த்ரே ரஸ்செல் குற்றம் சாட்டினார். இதே போல் ஒரு சில வீரர்களின் நடவடிக்கை அதிருப்தி அளித்ததால் அவர்களை அழைத்து கடிந்து கொண்டதாக கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார். வீரர்கள் இடையே ஒற்றுமை குறைந்து இருந்ததா? என்ற கேள்விக்கு கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளர் சைமன் கேடிச் ‘ஆமாம்’ என்று பதில் அளித்தார்.

சைமன் கேடிச் மேலும் கூறியதாவது:-

வீரர்களுக்கு இடையே களத்தில் ஒரு வித பதற்றமான சூழல் இருந்தது உண்மை. அதை மறைக்க முடியாது. கடந்த சில ஆட்டங்களில் இது அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் உத்வேகமும், ஒற்றுமையும் மிகவும் முக்கியம். இந்த வகையில் கொல்கத்தா அணியை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ஐ.பி.எல்.-ல் வெற்றிகரமான அணிகளில் கொல்கத்தாவும் ஒன்று. இந்த அணிக்காக ஒவ்வொருவரும் கடினமாக உழைத்து தங்களது நீண்ட கால பங்களிப்பை அளித்து இருக்கிறார்கள். அத்தகைய சிறப்பை தொடர இது போன்ற பிரச்சினையை களைவது அவசியமாகும்.

இந்த சீசனில் தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் தோல்வி கண்ட பிறகு வீரர்கள் மத்தியில் உற்சாகம் குறைந்தது. உத்வேகத்தில் மாற்றம் ஏற்பட்டது. அதிலும் ஆந்த்ரே ரஸ்செல் கேப்டன்ஷிப்பையும், அணி நிர்வாகத்தையும் வெளிப்படையாக விமர்சித்தது ஆரோக்கியமான சூழலை பாதித்தது என்பதை மறுப்பதற்கில்லை.

மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் எங்கள் அணியின் செயல்பாடு மிகவும் ஏமாற்றம் அளித்தது. பவர்-பிளேவுக்கு (49 ரன்னில் முதல் விக்கெட்) பிறகு தான் முதல் விக்கெட்டை இழந்தோம். ஆந்த்ரே ரஸ்செலுக்கு அவருக்குரிய நாளாக அமையவில்லை. ஒட்டுமொத்தத்தில் எல்லா பெருமையும் மும்பை பவுலர்களையே சாரும்.

பும்ராவும், மலிங்காவும் இங்குள்ள சூழலை கச்சிதமாக பயன்படுத்தி பந்து வீசினர். மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் எங்களுக்கு (இந்த மைதானத்தில் தொடர்ந்து 6 ஆட்டங்களில் கொல்கத்தா தோற்று இருக்கிறது) சிறப்பான சாதனை கிடையாது. ஆனால் அதை மாற்றுவதற்கும், வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கும் அருமையான வாய்ப்பு இருந்தும் அதை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டோம்.

இந்த சீசனை திரும்பி பார்த்தால் முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றோம். மிடில் பகுதி மோசமாக அமைந்து விட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான லீக் ஆட்டங்களில் வெற்றி பெறும் நிலையில் இருந்து தோல்வி அடைந்தோம். அந்த தோல்விகள் தான் எங்களது பிளே-ஆப் சுற்று வாய்ப்பை பாதித்து விட்டது.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தாலும் சில சாதகமான அம்சங்களை சுட்டிக்காட்ட முடியும். இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் போன்ற வீரருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பேட்டிங்கில் வெவ்வேறு வரிசையில் களம் இறங்கி அசத்தினார். சில வெளிநாட்டு வீரர்களும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டனர். பந்து வீச்சை எடுத்துக் கொண்டால், சந்தீப் வாரியர் கடைசி 3 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பு பெற்றார். ஆனாலும் தனது பணியை சிறப்பாக செய்தார். இவ்வாறு கேடிச் கூறினார்.


Next Story