விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்


விராட்கோலியுடன் வாக்குவாதம் பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்
x
தினத்தந்தி 7 May 2019 10:30 PM GMT (Updated: 7 May 2019 9:01 PM GMT)

விராட்கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு,

விராட்கோலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பெங்களூரு ஸ்டேடியத்தின் அறை கதவை உடைத்த நடுவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நோ–பால் சர்ச்சை

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கடந்த 4–ந் தேதி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் வீசிய ஒரு பந்தை ‘நோ–பால்’ என்று ஆடுகள நடுவரான நிஜெல் லாங் (இங்கிலாந்தை சேர்ந்தவர்) அறிவித்தார். ஆனால் டெலிவி‌ஷன் ரீப்ளேயில் உமேஷ் யாதவ் கோட்டின் மீது கால் வைத்து சரியாக பந்து வீசியது தெரிந்தது. இதனால் அதிருப்தி அடைந்த கேப்டன் விராட்கோலி, உமேஷ் யாதவ் ஆகியோர் நடுவருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை நடுவர் நிஜெல் லாங் சமாதானப்படுத்தினார். இருப்பினும் இருவரும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நடுவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிந்ததும் பெவிலியன் திரும்பிய நடுவர் நிஜெல் லாங் ஸ்டேடியத்தில் உள்ள நடுவர்கள் அறையின் கதவை ஆத்திரத்தில் ஓங்கி உதைத்தார். இதில் கதவு சேதம் அடைந்தது. இது குறித்து நடுவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அத்துடன் சேதம் அடைந்த கதவை சரிசெய்ய ரூ.5 ஆயிரத்தை நடுவர் நிஜெல் லாங் அளித்தார்.

ஐ.பி.எல். இறுதிப்போட்டியின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ள நிஜெல் லாங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் சுதாகர் ராவ் கருத்து தெரிவிக்கையில், ‘நடந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டியிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடுவர் நிஜெல் லாங் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறோம். வீரர்கள் தவறாக நடந்து கொண்டால் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்படுகிறது. நடுவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது’ என்றார்.


Next Story