கிரிக்கெட்

ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு + "||" + Hyderabad team exit: Bowlers Captain Shreyas Aiyar compliment

ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு

ஐதராபாத்தை வெளியேற்றியது டெல்லி அணி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டு
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டினார்.

விசாகப்பட்டினம், 

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தங்கள் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பாராட்டினார்.

டெல்லி அணி வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் விசாகப்பட்டினத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது. தோல்வி கண்ட ஐதராபாத் அணி போட்டியில் இருந்து வெளியேறியது. வெளியேற்றுதல் சுற்றில் ஐதராபாத் அணி தோல்வி காண்பது இது 3–வது முறையாகும். ஏற்கனவே 2013, 2017–ம் ஆண்டுகளிலும் இதேபோல் தோல்வியை சந்தித்து இருந்தது.

ஐதராபாத் அணி நிர்ணயித்த 163 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது. பிரித்வி ஷா 56 ரன்னும் (38 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ரிஷாப் பான்ட் 49 ரன்னும் (21 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து டெல்லி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். பவுண்டரி அடித்து அணி வெற்றி இலக்கை எட்ட வைத்த கீமோ பால் 5 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அமித் மிஸ்ரா அவுட்

கடைசி 3 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்கு 2 ரன்கள் தேவை என்ற நிலையில் இருக்கையில் அமித் மிஸ்ரா ரன் எடுக்க ஓடுகையில் பந்து வீச்சாளர் கலீல் அகமது பந்தை எடுத்து ஸ்டம்பை குறிவைத்து எறிந்தார். ஆனால் பந்து அமித் மிஸ்ராவின் பின்புறத்தில் பட்டதால் குறி தவறியது. இதனை அடுத்து ஐதராபாத் அணியினர் ‘அவுட்’ கேட்டு நடுவரிடம் அப்பீல் செய்தனர். இதைத்தொடர்ந்து 3–வது நடுவர் வீடியோவை ஆய்வு செய்து பார்த்ததில் கலீல் அகமது பந்தை ஸ்டம்பை நோக்கி எறிய முடியாத வகையில் அமித் மிஸ்ரா ஓடியது தெரியவந்தது. இதனால் அமித் மிஸ்ரா அவுட் என்று நடுவர் அறிவித்தார். ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் பீல்டருக்கு இடையூறாக செயல்பட்டு ஆட்டம் இழந்த 2–வது வீரர் அமித் மிஸ்ரா ஆவார். 2013–ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய யூசுப் பதான் இந்த மாதிரி ஆட்டம் இழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

ஸ்ரேயாஸ் அய்யர் கருத்து

வெற்றிக்கு பிறகு டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் அளித்த பேட்டியில், ‘கடைசி ஓவரின் போது இருந்த எனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அப்போது நான் நரகத்தில் இருப்பது போல் தவித்தேன். வெற்றி பெற்றது அருமையான மகிழ்ச்சியை அளித்தது. எல்லோருடைய முகத்திலும் புன்னகையை பார்க்க முடிந்தது. வெற்றி கொண்டாட்டம் தேவையானது தான். ஐதராபாத் அணி நல்ல தொடக்கம் கண்டது. மார்ட்டின் கப்திலின் அதிரடியை பார்த்த போது அந்த அணி பெரிய ஸ்கோரை எடுக்கும் என்று நினைத்தோம். மிடில் ஓவர்களில் நாங்கள் அவர்களை நன்றாக கட்டுப்படுத்தினோம். அமித் மிஸ்ரா அருமையாக பந்து வீசினார். மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். ரிஷாப் பான்ட், பிரித்வி ஷா அதிரடியாக ஆடினால் கட்டுப்படுத்துவது கடினம். அவர்கள் போக்கில் ஆடினால் அணியை வெற்றிக்கு அழைத்து செல்வார்கள். அடுத்து சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறோம். அந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படுவோம் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் நல்ல ஸ்கோரை தான் எடுத்தோம். 162 ரன்கள் வெற்றிக்கு போதுமான ரன் என்று நம்பினோம். ஒரு கட்டத்தில் நாங்கள் வலுவான நிலையில் தான் இருந்தோம். ஆனால் டெல்லி அணியினர் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தினார்கள். தோல்வி கண்டது வருத்தம் அளிக்கிறது. எங்களது பந்து வீச்சு கடைசி கட்டத்தில் சரியாக அமையவில்லை. பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படவில்லை. வார்னர், பேர்ஸ்டோ இல்லாதது எங்களுக்கு பாதிப்பு தான்’ என்றார்.

நிலைத்து நின்று ஆடுவேன்

ஆட்டநாயகன் விருது பெற்ற டெல்லி அணி வீரர் ரிஷாப் பான்ட் அளித்த பேட்டியில், ‘20 ஓவர் போட்டியில் 20 பந்துகளில் 40 ரன்கள் தேவை என்றால் ஒரு பந்து வீச்சாளரின் பந்துகளை தாக்க தயாராக இருக்க வேண்டும். யார் பந்து வீசுகிறார் என்று நான் பார்க்கமாட்டேன். இன்று நான் கடினமான ஷாட்களை அடித்து ஆட முயலவில்லை. பந்தை நன்கு கணித்து அதற்கு தகுந்தபடி விளையாடினேன். இதுபோன்ற ஆடுகளத்தில் நிலைத்து நின்றால், கடைசி வரை ஆட்டம் இழக்காமல் உங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தர வேண்டும். நான் அணியை வெற்றிக்கு அருகில் வரை அழைத்து சென்றேன். அடுத்த முறை அணி வெற்றியை எட்டும் வரை நிலைத்து நிற்பேன். நான் எதிர்மறையான எண்ணத்துடன் விளையாடவில்லை. அது ஆட்டத்துக்கு உதவாது’ என்று தெரிவித்தார்.