சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் டோனி பாராட்டு


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் டோனி பாராட்டு
x
தினத்தந்தி 11 May 2019 9:40 AM GMT (Updated: 11 May 2019 6:28 PM GMT)

பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடுகளே, டெல்லி அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கியக் காரணம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி தெரிவித்துள்ளார்.

விசாகப்பட்டினம்,

இறுதிப்போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை தீர்மானிக்கும் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி அணியை வென்றது. இவ்வெற்றிக்கு பின்னர் பேசிய டோனி, போட்டியில் கிடைத்த வெற்றிக்கு சென்னை அணியின் சிறந்த பந்துவீச்சே முக்கியக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார்.

வெற்றி குறித்து  சென்னை அணியின் கேப்டன் டோனி கூறும் போது,  "எங்கள் வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில், சில ரன்களை வழங்கினோம். சில கேட்சுகளை விக்கெட்களாக மாற்றத் தவறினோம். ஆனால், மிக முக்கியமானது அவற்றிலிருந்து மீண்டு வருவது.  

140+ ரன்கள் என்ற இலக்கை மிகச் சிறப்பாக சேஸ் செய்தோம். போட்டி 7.30 மணிக்கு தொடங்குவது ஆடுகளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில் ரன் எடுக்க சற்று சிரமமாக இருந்தது. ஸ்பின்னர்கள் அதன் காரணமாகத்தான் அதிகமாகப் பந்தை சுழற்ற முடிந்தது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக  பந்துவீசினர். அவர்கள், டெல்லி அணியை முழுமையாகக் கட்டுப்படுத்தினர். 

டெல்லியின் பேட்டிங் வலிமையானது. அவர்கள், அணியில் அதிக இடக்கை பேட்ஸ்மேன்கள் இருந்தனர். நாங்கள் அவர்களைக் கட்டுப்படுத்த, இடக்கை சுழற்பந்துவீச்சாளரைக் கொண்டிருந்தோம். விக்கெட் எடுக்கும் நேரம் என்பது மிக முக்கியமானது. குறைந்த இடைவெளியில், அடுத்தடுத்து விக்கெட்களை அவர்கள் இழந்ததால், புதிதாக வரும் வீரர்களுக்கு அதிரடியாக ஆட சிரமமாக இருக்கும். அணியின் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பாராட்டுகள்” 

கேப்டனாக நான் அவர்களை உரிய நேரத்தில் பந்துவீச மட்டும் அழைக்க முடியும்.  ஆனால், பந்து அவர்கள் கையில் சென்றபிறகு, அவர்கள்தான் அதை சரியாகச் செய்ய வேண்டும். எங்கள் ஸ்பின்னர்ஸ் அவர்களின் அனுபவத்தைக் கொண்டு விளையாடினர் என்றுதான் சொல்ல வேண்டும். அதையும் தாண்டி, வீரர்களின் ஃபிட்னஸ் குறித்து சொல்ல வேண்டும். சீனியர் வீரர்களான அவர்கள், சுமார் 50 நாள்கள் அதிக வெப்பம் கொண்ட ஆடுகளங்களில் விளையாடியுள்ளனர். இதில் ஒரு நல்ல விஷயம், பெரிதாக யாரும் இதுவரை காயம் இல்லாமல் கடந்து வந்துள்ளோம். அதற்காகவே, பந்துவீச்சாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர்களால்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது" என கூறினார்.

Next Story