அடுத்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவேன் - டோனி நம்பிக்கை


அடுத்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவேன் - டோனி நம்பிக்கை
x
தினத்தந்தி 13 May 2019 11:15 PM GMT (Updated: 13 May 2019 10:39 PM GMT)

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவேன் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி நம்பிக்கை தெரிவித்தார்.

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் தோல்வி கண்ட பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த சீசனில் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய விதத்தை திரும்பி பார்த்தால் சிறப்பாக விளையாடி இந்த இடத்துக்கு வந்ததாக சொல்ல முடியாது. எங்களது மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை சரியாக அமையவில்லை. இறுதிப்போட்டி வேடிக்கையானதாக இருந்தது. இரு அணிகளின் பக்கமும் கோப்பை மாறி, மாறி தாவுவது போல் இருந்தது. ஏனெனில் இரு அணிகளும் நிறைய தவறுகள் இழைத்தன. ஆனால் எந்த அணி குறைந்த எண்ணிக்கையிலான தவறை செய்ததோ அந்த அணி வெற்றி பெற்று இருக்கிறது.

இறுதிப்போட்டியிலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எப்போது விக்கெட் தேவையோ? அப்போது பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தினார்கள். எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்தினார்கள். ஷேன் வாட்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார். அவருடன் யாராவது ஒருவர் நிலைத்து நின்று விளையாடி இருக்க வேண்டும். எந்தெந்த இடத்தில் தவறு செய்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆனால் அதற்கு தற்போது நேரமில்லை. அடுத்து வரும் உலக கோப்பை போட்டியை குறித்து சிந்திக்க வேண்டி இருக்கிறது. உலக கோப்பை போட்டிக்கு பிறகு சென்னை அணியில் ஏற்பட்டு இருக்கும் இடைவெளி குறித்து ஆய்வு செய்து அதனை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எதுவும் சொல்ல முடியாது. பேட்ஸ்மேன்கள் தான் சரியாக செயல்படவில்லை. இவ்வாறு டோனி கூறினார்.

அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் நீங்கள் விளையாடுவீர்களா என்று கேட்டதற்கு, ‘ஆம். நம்பிக்கை இருக்கிறது’ என்று பதிலளித்தார்.

சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் (நியூசிலாந்து) கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த 2 ஆண்டுகளில் எங்கள் அணி நன்றாகவே செயல்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு கோப்பையை வென்றோம். இந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம். வயதில் மூத்த வீரர்களை கொண்டது எங்கள் அணி என்பதை நாங்கள் புரிந்து கொண்டு இருக்கிறோம். அந்த நிலையில் தான் டோனியும் இருக்கிறார். ஒரு கட்டத்தில் எங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இந்த சீசனில் எங்கள் அணியின் பேட்டிங் பலவீனமாக இருந்தது. அதில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இருப்பினும் நாங்கள் இறுதிப்போட்டி வரை முன்னேறியதுடன், கடைசி பந்து வரை வெற்றிக்காக போராடி இருக்கிறோம். மிகப்பெரிய தருணத்தில் கேப்டன் டோனி ‘ரன்-அவுட்’ ஆனார். அவர் ஆட்டம் இழந்தது எங்கள் அணியை பலவீனப்படுத்தியது. அதேநேரத்தில் எதிரணிக்கு வலு சேர்ப்பதாக அமைந்தது. நாங்கள் பவர்பிளேயில் (53 ரன்னுக்கு ஒரு விக்கெட்) கண்ட நல்ல தொடக்கத்துக்கு ஆட்டம் கடைசி பந்து வரை செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. கடைசி ஓவரை மலிங்கா நன்றாக வீசினார். நீண்ட நேரம் பேட்டிங் செய்த ஷேன் வாட்சன் களைப்படைந்து விட்டார். இறுதிப்போட்டி கடைசி பந்து வரை சென்றது சிறப்பானதாகும்’ என்றார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்கில் டோனி சாதனை


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து வரும் கேப்டன் டோனி, ஐ.பி.எல். போட்டியின் விக்கெட் கீப்பிங்கில் புதிய சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் மும்பை அணி வீரர்கள் குயின்டான் டி காக், ரோகித் சர்மா ஆகியோரின் விக்கெட்டுகளை டோனி தனது கேட்ச் மூலம் ஆட்டம் இழக்க வைத்தார். 190 ஐ.பி.எல். ஆட்டங்களில் விளையாடி இருக்கும் டோனி இதுவரை 132 விக்கெட்டுகளை (94 கேட்ச், 38 ஸ்டம்பிங்) வீழ்த்த காரணமாக இருந்துள்ளார். இதற்கு முன்பு கொல்கத்தா அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் 182 ஆட்டங்களில் 131 விக்கெட்டுகள் (101 கேட்ச், 30 ஸ்டம்பிங்) விழ காரணமாக இருந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை டோனி தகர்த்துள்ளார்.

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: மும்பை அணி வீரர் பொல்லார்ட்டுக்கு அபராதம்

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கின் போது கடைசி ஓவரில் வெய்ன் பிராவோ பந்து வீச்சில் வைடு கொடுக்கவில்லை என்று நடுவருடன் வாக்குவாதம் செய்த பொல்லார்ட் தனது பேட்டை மேல் நோக்கி தூக்கி எறிந்தார். வீரர்களின் நடத்தை விதிமுறையை மீறிய இந்த சம்பவம் குறித்து நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எல். நிர்வாகம் மும்பை இந்தியன்ஸ் வீரர் பொல்லார்ட்டுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதத்தை அபராதமாக விதித்தது.

டோனிக்கு ரன்-அவுட் வழங்கிய நடுவரை அழுதபடி விமர்சித்த சிறுவன்

ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி 2 ரன்னில் இருக்கையில் மும்பை அணி வீரர் இஷான் கிஷனால் ‘ரன்-அவுட்’ செய்யப்பட்டார். இந்த முடிவை நீண்ட நேர இழுபறிக்கு பிறகு 3-வது நடுவர் உறுதி செய்தார். டோனிக்கு வழங்கப்பட்ட ‘ரன்-அவுட்’ தவறானது என்று சர்ச்சை எழுந்து இருக்கிறது. இதற்கிடையில் டோனிக்கு வழங்கப்பட்ட ‘ரன்-அவுட்’ சரியானது இல்லை என்று சென்னை அணியின் இளம் ரசிகர் ஒருவர் தேம்பி, தேம்பி அழுதபடி விமர்சிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ரன்-அவுட்’ முடிவை அளித்த நடுவருக்கு அந்த இளம் ரசிகர் சாபமும் விடுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Next Story