‘மும்பை இந்தியன்ஸ் அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு’ - கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி


‘மும்பை இந்தியன்ஸ் அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசு’ - கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 May 2019 11:30 PM GMT (Updated: 13 May 2019 10:50 PM GMT)

‘ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது அணியினரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பரிசாகும்’ என்று கேப்டன் ரோகித் சர்மா மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஐதராபாத்,

12-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் ஐதராபாத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. பொல்லார்ட் (நாட்-அவுட்) 41 ரன்னும், தொடக்க ஆட்டக்காரர் குயின்டான் டி காக் 29 ரன்னும், இஷான் கிஷன் 23 ரன்னும், கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் தீபக் சாஹர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து மயிரிழையில் தோல்வியை தழுவியது. கடைசி பந்தில் சென்னை அணியின் வெற்றிக்கு 2 ரன் தேவை என்ற நிலையில் ஷர்துல் தாகூர் விக்கெட்டை மலிங்கா எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தி மும்பை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதிரடியாக ஆடி 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்த ஷேன் வாட்சனின் சிறப்பான பேட்டிங் சென்னை அணிக்கு பலன் அளிக்காமல் வீணானது. 2 விக்கெட்டுகள் வீழ்த்திய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். 52 சிக்சர் உள்பட 510 ரன்கள் சேர்த்த கொல்கத்தா அணி வீரர் ரஸ்செல் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

5-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய மும்பை அணி 4-வது முறையாக கோப்பையை உச்சி முகர்ந்து சாதனை படைத்தது. ஏற்கனவே அந்த அணி 2013, 2015, 2017-ம் ஆண்டுகளில் கோப்பையை வென்று இருந்தது. 2010-ம் ஆண்டில் மட்டும் இறுதிப்போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் ஐ.பி.எல். கோப்பையை அதிக முறை வென்ற அணி என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது.

8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த சென்னை அணி 4-வது முறையாக கோப்பையை வெல்ல கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டது. 2010, 2011, 2018-ம் ஆண்டுகளில் சாம்பியனான சென்னை அணி இறுதிப்போட்டியில் தோல்வி காண்பது இது 5-வது முறையாகும். அதிலும் குறிப்பாக மும்பை அணியிடம் 4 முறை இறுதிப்போட்டியில் மல்லுக்கட்டியதில் முதல் முறை மட்டுமே சென்னை அணி வெற்றி பெற்றது. மற்ற 3 மோதலிலும் சென்னை அணிக்கு தோல்வியே மிஞ்சியது. இந்த சீசனில் சென்னை அணி, மும்பைக்கு எதிரான தனது 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டது. இதேமாதிரி கடந்த ஆண்டில் (2018) ஐதராபாத் அணி, சென்னை அணியிடம் 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு கோப்பையை கோட்டை விட்டது.

சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு ரூ.20 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இதனை இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு தலைவர் சி.கே. கண்ணா வழங்கினார். 2-வது இடம் பெற்ற சென்னை அணிக்கு ரூ.12½ கோடி பரிசாக அளிக்கப்பட்டது. 692 ரன்கள் குவித்து ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றிய ஐதராபாத் அணி வீரர் டேவிட் வார்னர், 26 விக்கெட்டுகள் கைப்பற்றி ஊதா நிற தொப்பியை தன்வசப்படுத்திய சென்னை அணி வீரர் இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

ரோகித் சர்மா மகிழ்ச்சி

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடர் முழுவதும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதனால் தான் நாங்கள் புள்ளிபட்டியலில் முதலிடம் பிடிக்க முடிந்தது. எல்லா விஷயங்களிலும் நாங்கள் அணியாக கூட்டு முயற்சியில் ஈடுபட்டோம். அதற்கு கிடைத்த பரிசாகவே இந்த வெற்றியை கருதுகிறேன். அணியில் இடம் பிடித்துள்ள 25 வீரர்களும் ஒவ்வொரு கட்டத்திலும் அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்தனர். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை அவர்கள் சரியாக பயன்படுத்தினர். மலிங்கா சிறப்பான பந்து வீச்சாளர். அவர் எங்கள் அணிக்கு பல ஆண்டுகளாக நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார். கடைசி ஓவரில் பந்து வீசும் வாய்ப்பை ஹர்திக் பாண்ட்யாவுக்கு கொடுக்கலாமா? என்று நினைத்தேன். அனுபவம் வாய்ந்த மலிங்காவுக்கு கொடுப்பது தான் சரியாக இருக்கும் என்று முடிவு செய்து அவரை கடைசி ஓவரில் பந்து வீச வைத்தோம். அந்த ஓவரில் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் திட்டமாகும். ஷர்துல் தாகூர் கடைசி பந்தை அதிரடியாக அடித்து ஆட்ட முயற்சிப்பார் என்று கருதி ஸ்லோ பந்து வீசும் படி மலிங்காவிடம் தெரிவித்தேன். அவர் அதனை நேர்த்தியாக செய்து முடித்தார். 2017-ம் ஆண்டிலும் நாங்கள் இதேபோல் இறுதிப்போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றோம். புனே அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் எங்கள் அணி வீரர் மிட்செல் ஜான்சன் கடைசி ஓவரை சிறப்பாக வீசி வெற்றி தேடிக்கொடுத்தது எனது நினைவில் இருந்தது. ஐ.பி.எல். போட்டியில் பட்டம் வெல்வது என்பது கடினமானதாகும். எனவே நான் எந்த வெற்றி சிறந்தது என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை.’ என்று தெரிவித்தார்.

தெண்டுல்கர் கருத்து

மும்பை அணியின் ஆலோசகரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான தெண்டுல்கர் அளித்த பேட்டியில், ‘டோனி ரன்-அவுட் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். அது முக்கியமான தருணமாகும். பும்ரா கட்டுக்கோப்பாக பந்து வீசினார். ஒரு ஓவரில் மலிங்கா அதிக ரன் விட்டுக்கொடுத்தாலும் கடைசி ஓவரை அவர் சிறப்பாக நிறைவு செய்தார். 2017-ம் ஆண்டில் நாங்கள் 129 ரன்னை வைத்து கோப்பையை வென்றோம். அதனால் நம்பிக்கை இருந்தது’ என்று தெரிவித்தார்.


Next Story