முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் (1975)


முதலாவது உலக கோப்பை கிரிக்கெட் (1975)
x
தினத்தந்தி 15 May 2019 10:44 PM GMT (Updated: 15 May 2019 10:44 PM GMT)

சர்வதேச ஒரு நாள் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக 1975-ம் ஆண்டு (ஜூன் 7-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை) உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து தங்கள் நாட்டில் நடத்தியது.

60 ஓவர்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட உலக கோப்பை கிரிக்கெட்  போட்டியில் வீரர்கள் டெஸ்ட் போட்டி போன்று வெள்ளை நிற சீருடையுடன் விளையாடினார்கள்.

போட்டியில் கலந்து கொண்ட 8 அணிகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, இந்தியா, கிழக்கு ஆப்பிரிக்கா அணிகள் ‘ஏ’ பிரிவிலும், வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் ‘பி’ பிரிவிலும் இடம் பெற்றன.

இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 202 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அடுத்த லீக் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவை வென்றது. கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோற்றது. வெங்கட்ராகவன் தலைமையிலான இந்திய அணி ஒரே ஒரு ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது.

லீக் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் அரைஇறுதிக்குள் நுழைந்தன. அரைஇறுதி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தையும், வெஸ்ட்இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் அரங்கேறிய இறுதிப்போட்டியில் கிளைவ் லாயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ்-இயான் சேப்பல் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்தது. கேப்டன் கிளைவ் லாயிட் 102 ரன்கள் விளாசினார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 58.4 ஓவர்களில் 274 ரன்னில் ஆல்-அவுட் ஆகி 17 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. 5 வீரர்கள் ரன்-அவுட் ஆனது ஆஸ்திரேலிய அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்த கால கட்டத்தில் கிரிக்கெட்டின் வல்லரசாக வலம் வந்த வெஸ்ட்இண்டீஸ் அணி அனைவரும் எதிர்பார்த்தது போல் உலக கோப்பையை உச்சி முகர்ந்தது.

ரசிகர்களை கடுப்பேற்றிய கவாஸ்கரின் ஆமை வேக ஆட்டம்

இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாதது என்னவென்றால் இங்கிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுனில் கவாஸ்கர் ஆடிய ஆமை வேக ஆட்டம் எனலாம். முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 60 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களே எடுத்து 202 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சுனில் கவாஸ்கர் 174 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரியுடன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவர் ஆட்டம் முடிந்து வெளியே வந்த போது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் கொந்தளித்து விட்டனர். ஏன் வெற்றிக்காக போராடவில்லை என்று கவாஸ்கரிடம் பல ரசிகர்கள் தகராறு செய்தனர். முதலாவது உலக கோப்பை போட்டிக்கு முன்பு குறைந்த அளவிலேயே ஒரு நாள் போட்டியில் ஆடி இருந்ததால் நிறைய வீரர்களின் ஆட்டத்தில் டெஸ்ட் போட்டியின் தாக்கம் தெரிந்தது.

Next Story