உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐ.சி.சி. அறிவிப்பு


உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசு - ஐ.சி.சி. அறிவிப்பு
x
தினத்தந்தி 18 May 2019 5:00 AM IST (Updated: 18 May 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.28 கோடி பரிசாக வழங்கப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

துபாய்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 46 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

இந்த போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று அறிவித்தது. உலக கோப்பை போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.70 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.28 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.14 கோடியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2-வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரைஇறுதியில் தோல்வி பெறும் அணிகளுக்கு ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக கிடைக்கும். இந்த தொகையும் உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் கிடைக்கும். லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்படும்.


Next Story