ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)


ஆஸ்திரேலியா மீண்டும் சாம்பியன் (1999)
x
தினத்தந்தி 21 May 2019 11:15 PM GMT (Updated: 21 May 2019 8:43 PM GMT)

1999ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.


7-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்து 4-வது முறையாக நடத்தியது. ஒரு சில லீக் ஆட்டங்கள் அண்டை நாடுகளான ஸ்காட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகளிலும் நடந்தன.

1999-ம் ஆண்டு மே 14-ந்தேதி முதல் ஜூன் 20-ந்தேதி வரை நடந்த இந்த உலக கோப்பை போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து அணிகள் கழற்றி விடப்பட்டு வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகள் அறிமுகம் ஆகின. அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.

இந்த உலக கோப்பையில் லீக் சுற்றுக்கு பிறகு ‘சூப்பர் சிக்ஸ்’ என்ற குழப்பமான முறை கொண்டு வரப்பட்டது. அதாவது லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் சிக்சுக்கு முன்னேறும் அணிகள் தங்கள் பிரிவில் இருந்து வரும் மற்ற அணிகளை தோற்கடித்து இருந்தால் அதற்குரிய புள்ளிகளை போனஸ் புள்ளிகளாக ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு எடுத்து வர முடியும்.

லீக் சுற்றில் ஒரு சில முடிவுகள் பரபரப்பாக பேசப்பட்டது. ‘பி’ பிரிவில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேச அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. ஆனால் ஏற்கனவே முதல் 4 லீக்கிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றை உறுதி செய்திருந்த பாகிஸ்தானுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

‘ஏ’ பிரிவில் அங்கம் வகித்த முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேயிடம் தோல்வியை தழுவியது. இதில் குட்டி அணியான ஜிம்பாப்வேயிடம் உதை வாங்கியது தான் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. 46 ஓவர்களில் 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு கடைசி 2 ஓவரில் வெறும் 9 ரன் தான் தேவைப்பட்டது. ஜிம்பாப்வே வேகப்பந்து வீச்சாளர் ஒலங்கா வீசிய ஆட்டத்தின் 45-வது ஓவரில் ராபின்சிங் (35 ரன்), ஸ்ரீநாத் (18 ரன்), வெங்கடேஷ் பிரசாத் (0) ஆகியோர் வரிசையாக காலியானார்கள். இதனால் 3 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்று போனது. இதன் பின்னர் எழுச்சி பெற்ற இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் கென்யாவை 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. தனது தந்தையின் இறுதிச்சடங்கை முடித்து விட்டு மீண்டும் அணியுடன் இணைந்து களம் இறங்கிய தெண்டுல்கர் இந்த ஆட்டத்தில் 140 ரன்கள் குவித்து ரசிகர்களை நெகிழ வைத்தார். தொடர்ந்து நடப்பு சாம்பியன் இலங்கையை இந்தியா 157 ரன்கள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்தது. இந்த மோதலில் சவுரவ் கங்குலி 183 ரன்களும் (17 பவுண்டரி, 7 சிக்சர், 158 பந்து), ராகுல் டிராவிட் 145 ரன்களும் விளாசியதோடு 2-வது விக்கெட்டுக்கு 318 ரன்கள் சேர்த்து புதிய வரலாறு படைத்தனர். அத்துடன் கங்குலி எடுத்த 183 ரன்களே இந்த நாள் வரைக்கும் உலக கோப்பையில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்சமாக நீடிக்கிறது. இதன் பின்னர் இங்கிலாந்தை 63 ரன்கள் வித்தியாசத்தில் வெளியேற்றிய இந்திய அணி ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றை எட்டியது. முதல் 4 ஆட்டங்களில் வெற்றி கண்ட தென்ஆப்பிரிக்க அணி தனது கடைசி லீக்கில் யாரும் எதிர்பாராத வகையில் ஜிம்பாப்வேயிடம் மண்டியிட்டது.

‘ஏ’ பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றை எட்டின. ஆச்சரியப்படும் வகையில், ஜிம்பாப்வே 4 போனஸ் புள்ளிகளுடன் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு வந்தது. தென்ஆப்பிரிக்கா 2 புள்ளி பெற்றிருந்தது. போனஸ் புள்ளி இல்லாமல் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டது. மற்றொரு பிரிவில் டாப்-3 இடங்களை பிடித்த பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்குள் நுழைந்தன.

‘ஏ’ பிரிவில் இருந்து தகுதி பெற்ற அணிகள் ‘பி’ பிரிவு அணிகளுடன் சூப்பர் சிக்ஸ் சுற்றில் தலா ஒரு முறை மோதின. இந்திய அணி சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு எதிராக) மூட்டையை கட்டியது. அந்த ஒரு வெற்றி பாகிஸ்தானுக்கு எதிராக 47 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்ததாகும். அதுவும் கார்கில் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இந்திய அணி பாகிஸ்தானை போட்டுத்தாக்கியதால் ரசிகர்கள் உணர்வுபூர்வமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்தியாவை போன்றே சூப்பர் சிக்சில் 3 ஆட்டங்களிலும் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆஸ்திரேலியா, அதை கனகச்சிதமாக செய்து காட்டியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டம் தான் ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக இருந்தது. தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 272 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 48 ரன்களுடன் தள்ளாடியது. பிறகு கேப்டன் ஸ்டீவ் வாக் அணியை தூக்கி நிறுத்தினார். அவர் 57 ரன்களில், குளுஸ்னர் வீசிய பந்தை அடித்த போது அது ‘ஷாட் மிட்விக்கெட்’ திசையில் நின்ற கிப்ஸ் கையில் சிக்கியது. ஆனால் கேட்ச் மகிழ்ச்சியை அவசர கோலத்தில் கொண்டாட முயன்ற கிப்ஸ் பந்தை மேலே தூக்கி போட்டு பிடிக்க முயன்ற போது அது கையை விட்டு நழுவிப்போனது. கண்ணிமைக்கும் நேரத்தில் இது நடந்து விட்டதால் அது கேட்ச் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அப்போது ஸ்டீவ் வாக் கிப்சிடம், ‘கேட்ச்சை மட்டும் விடவில்லை. உலக கோப்பையையும் நழுவ விடுகிறீர்கள்’ என்று கூறி கிண்டல் செய்தாராம். பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவ் வாக் 120 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

‘சூப்பர் சிக்ஸ்’ முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை பந்தாடியது.

தென்ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையே பர்மிங்காமில் நடந்த மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்காவை சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே நிலைகுலைய வைத்தார். டாப்-4 பேட்ஸ்மேன்கள் அவரது சுழலுக்கு இரையானார்கள். இதன் பிறகு காலிஸ் (53 ரன்), ஜான்டி ரோட்ஸ் (43 ரன்) அணியை சரிவில் இருந்து மீட்டனர். கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் லான்ஸ் குளுஸ்னர் அதிரடி காட்டி அணியை வெற்றியின் விளிம்புக்கு கொண்டு வந்தார். கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. கடைசி விக்கெட்டாக குளுஸ்னர், டொனால்டு களத்தில் இருந்தனர். இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளமிங் வீசினார். முதல் 2 பந்தை அட்டகாசமாக பவுண்டரியாக்கி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்த குளுஸ்னர் 3-வது பந்தில் ரன் எடுக்கவில்லை. 4-வது பந்தும் பேட்டில் சரியாக அடிபடவில்லை. இருப்பினும் ஒரு ரன் எடுக்க மின்னல் வேகத்தில் ஓடினார். எதிர்முனையில் நின்ற டொனால்டு பந்து எந்த பீல்டரிடம் செல்கிறது என்று ‘பராக்’ பார்த்து கொண்டிருந்தார். ஏறக்குறைய குளுஸ்னர் மறுமுனைக்கு வந்த பிறகு தான் டொனால்டு ஓட ஆரம்பித்தார். அதற்குள் அவர் ரன்-அவுட் செய்யப்பட்டார். தென்ஆப்பிரிக்கா 49.5 ஓவர்களில் 213 ரன்னில் ஆட்டம் இழந்து சமன் (டை) ஆனது. உலக கோப்பையில் டையில் முடிந்த முதல் ஆட்டம் இது தான். இதன் பிறகு சூப்பர் சிக்ஸ் சுற்றில் ரன்ரேட்டில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. தென்ஆப்பிரிக்கா பரிதாபமாக வெளியேறியது.

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் லண்டன் லார்ட்சில் அரங்கேறியது. லீக் சுற்றில் ஏற்கனவே ஆஸ்திரேலியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தி இருந்ததால் இறுதி சுற்றிலும் மிரட்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு தரப்பாக நகர்ந்த இறுதி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 39 ஓவர்களில் 132 ரன்னில் முடங்கியது. இந்த இலக்கை ஆஸ்திரேலியா 20.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது முறையாக மகுடம் சூடியது. அரைஇறுதி போன்றே இந்த ஆட்டத்திலும் 4 விக்கெட்டுகளை அள்ளிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் வார்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆல்-ரவுண்டராக ஜொலித்த தென்ஆப்பிரிக்காவின் குளுஸ்னர் (281 ரன் மற்றும் 17 விக்கெட்) தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதில் ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் இந்தியாவின் ராகுல் டிராவிட் (2 சதத்துடன் 461 ரன்) முதலிடம் பிடித்தார். பந்து வீச்சில் ஜெப் அலோட் (நியூசிலாந்து), வார்னே (ஆஸ்திரேலியா) ஆகியோர் தலா 20 விக்கெட்டுகளுடன் முதலிடம் பெற்றனர். இந்த உலக கோப்பையில் மொத்தம் 11 சதங்கள் பதிவாகின. இதில் இந்தியர்களின் பங்களிப்பு 5 சதம் ஆகும்.

தென்ஆப்பிரிக்காவின் தில்லாலங்கடி

இந்த உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தின் போது தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் ஹன்சி குரோனே, வேகப்பந்து வீச்சாளர் ஆலன் டொனால்டு ஆகியோர் காதுகளில் மைக்ரோபோன் மாட்டிக்கொண்டு அதன் மூலம் மைதானத்தில் இருந்தபடியே ஓய்வுஅறையில் இருந்த பயிற்சியாளர் பாப் உல்மரிடம் ஆலோசனை கேட்டு செயல்பட்டனர். இதை கண்டறிந்த இந்திய வீரர் கங்குலி, குளிர்பான இடைவேளையின் போது நடுவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதையடுத்து மைக்ரோபோனை அகற்ற நடுவர்கள் உத்தரவிட்டனர். வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


Next Story