கிரிக்கெட்

தனிப்பட்ட வீரரால் சாதிக்க முடியாது: உலக கோப்பையை வெல்ல கூட்டு முயற்சி அவசியம் - தெண்டுல்கர் கருத்து + "||" + Individual player can not achieve, a joint effort to win the World Cup - Tendulkar Comment

தனிப்பட்ட வீரரால் சாதிக்க முடியாது: உலக கோப்பையை வெல்ல கூட்டு முயற்சி அவசியம் - தெண்டுல்கர் கருத்து

தனிப்பட்ட வீரரால் சாதிக்க முடியாது: உலக கோப்பையை வெல்ல கூட்டு முயற்சி அவசியம் - தெண்டுல்கர் கருத்து
உலக கோப்பையை இந்திய அணி வெல்ல கூட்டு முயற்சி அவசியமானதாகும். தனிபட்ட வீரரால் மட்டும் சாதித்து விட முடியாது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மும்பை,

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் 1996, 1999 மற்றும் 2003-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் இந்திய அணி உங்களது ஆட்டத்தை தான் அதிகம் நம்பி இருந்தது. அதேபோன்ற சுமை இந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலிக்கு இருக்கிறதே? என்று கேட்கப்பட்டது. அதற்கு தெண்டுல்கர் கூறியதாவது:-


எப்பொழுதும் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒன்றிரண்டு வீரர்கள் தங்களது உயர்வான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு இன்றி நீங்கள் அதிகம் எதுவும் செய்து விட முடியாது. தனிப்பட்ட ஒரே ஒரு (விராட்கோலி) வீரரின் ஆட்டத்தை வைத்து உலக கோப்பையை வென்று விட முடியாது. ஆட்டத்தின் ஒவ்வொரு முக்கியமான கட்டத்திலும் மற்ற வீரர்களின் பங்களிப்பு அவசியமாகும். இந்த கூட்டு முயற்சி சரியாக அமையாவிட்டால் ஏமாற்றம் தான் மிஞ்சும்.

இந்திய அணியின் 4-வது பேட்டிங் வரிசையில் பிரச்சினை இருப்பதாக கேட்கிறீர்கள். 4-வது வரிசை என்பது ஒரு எண் தான். 4-வது பேட்டிங் வரிசையில் பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கவில்லை. அந்த வரிசைக்கு நம்மிடம் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எனவே அதனை நம்மால் எளிதாக சரி செய்து விட முடியும். நமது வீரர்கள் போதுமான அளவுக்கு போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள்.

எனவே 4-வது மட்டுமின்றி 6-வது, 8-வது வரிசையில் கூட என்ன செய்ய வேண்டும் என்பது நமது வீரர்களுக்கு தெரியும். சூழ்நிலையை அறிந்து அதற்கு தகுந்த படி விளையாடுவது தான் மிகவும் முக்கியமானதாகும்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தற்போது இரு முனைகளிலும் இரு வேறு புதிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைக்கப்படுவதால் ஒருதலைபட்சமாகி பவுலர்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஒரு அணி 350 ரன்களை குவிக்கிறது. அடுத்த அணி அந்த இலக்கை 45 ஓவர்களுக்குள் எட்டிப்பிடிக்கிறது.

இருமுனையிலும் புதிய பந்து பயன்படுத்தப்படுவதால் பந்து கடைசி வரை கடினத் தன்மையுடன் இருக்கிறது. இதனால் பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகுவது அரிதாகி விட்டது. நாங்கள் விளையாடிய போது ஒரு பந்து மட்டும் தான் பயன்படுத்தப்பட்டது. அதனால் 28 அல்லது 30-வது ஓவரில் பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆக தொடங்கி விடும். சில அணிகள் அதற்கு சில ஓவர்கள் முன்பு கூட ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்து விடும். இறுதி கட்டத்தில் பந்து மென்மையாகி விடும். பந்தின் நிறம் கூட மாறி விடும். இத்தகைய சவால்களை கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சந்திக்க வேண்டியது இருந்தது. ஆனால் இப்போது பந்து கடைசி வரை கடினமாக இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கி விடுகிறார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இரண்டு புதிய பந்து பயன்படுத்தினால் பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமான ஆடுகளத்தை உருவாக்க வேண்டும். அல்லது பழைய மாதிரி ஒரே பந்தில் 50 ஓவர்களும் வீசப்பட வேண்டும். அப்படி செய்தால் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வது சாத்தியமாகும். என்ன செய்தாலும் அதில் பவுலர்களுக்கும் அனுகூலம் இருக்கும் வகையில் பார்த்து கொள்ள வேண்டும்.

மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை என்ன தான் பேட்ஸ்மேன்கள் புரிந்து கொண்டாலும் தங்கள் விக்கெட்டுகளை இழப்பது நடந்து கொண்டு தான் இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் குறித்து குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் அதிகம் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் இருவரது பந்து வீச்சையும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் சரியாக கணித்து செயல்பட்டனர் என்பது உண்மை தான். அதற்காக பேட்ஸ்மேன்கள் தவறே செய்யமாட்டார்கள் என்றோ? அல்லது அவர்களை தவறு செய்ய வைக்க முடியாது என்றோ? அர்த்தம் கிடையாது. முரளிதரனின் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் புரிந்து வைத்து இருந்தாலும் அவர் தொடர்ந்து விக்கெட் வீழ்த்த தானே செய்தார். பந்தை கணிப்பதில் சிறந்த பேட்ஸ்மேன் கூட தவறு செய்வார்.

இந்திய அணியில் சரியான கலவையில் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பல வீரர்கள் 8 முதல் 10 வருடங்கள் வரை விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அதேநேரத்தில் திறமையான இளம் வீரர்கள் குல்தீப் யாதவ், லோகேஷ் ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் உள்ளனர். எனவே நமது அணி அனுபவமும், இளம் திறமையும் கலந்து அருமையாக இருக்கிறது. உலக கோப்பையை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். இவ்வாறு தெண்டுல்கர் கூறினார்.