டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் - தெண்டுல்கர் சொல்கிறார்


டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் - தெண்டுல்கர் சொல்கிறார்
x
தினத்தந்தி 23 May 2019 11:42 PM GMT (Updated: 2019-05-24T05:12:25+05:30)

டோனி 5-வது வரிசையில் ஆட வேண்டும் என தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டோனி வழக்கம் போல 5-வது வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும். டோனியை பொருத்தமான அந்த இடத்தில் இருந்து மாற்றக்கூடாது. ஆடும் லெவன் அணியின் கலவை எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. இருப்பினும் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவானும், 3-வது வீரராக விராட்கோலியும் களம் இறங்க வேண்டும். 4-வது வீரராக யாரையும் இறக்கலாம், 5-வது வீரராக டோனியை களம் இறக்க வேண்டும்.

அவருக்கு அடுத்து அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்ட்யாவை களம் காண வைக்கலாம். தரமான பேட்ஸ்மேன் எந்த வரிசைக்கு தகுந்தபடியும் தனது ஆட்டத்தை மாற்றிக் கொள்ள முடியும். ஐ.பி.எல்.போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பந்தை நன்கு கணித்து அடித்து ஆடினார். அவர் முறையான கிரிக்கெட் ஷாட்களை அடிக்கிறார். அவர் நல்ல நம்பிக்கையுடன் உலக கோப்பை போட்டிக்கு சென்றுள்ளார். அந்த நம்பிக்கை களத்தில் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இடக்கை பேட்ஸ்மேனான ஷிகர் தவான், வலது கை பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடுகையில் பந்து வீச்சாளர்கள் தங்களது பந்து வீச்சு முறையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். அவர் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தில் நிலைத்து நின்றால் எதிரணி பவுலர்களுக்கு நெருக்கடி அளிக்கும். இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 4-வது அணியாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரைஇறுதிக்குள் நுழையும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story