5-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் (2015)


5-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் (2015)
x
தினத்தந்தி 25 May 2019 11:15 PM GMT (Updated: 25 May 2019 9:53 PM GMT)

11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் கைகோர்த்து நடத்தின.

2015-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியில் இருந்து மார்ச் 29-ந்தேதி வரை மொத்தம் 14 நகரங்களில் அரங்கேறின.

பங்கேற்ற 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி அதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.

டோனி தலைமையில் பங்கேற்ற நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் தான் சந்தித்த 6 அணிகளையும் வறுத்தெடுத்தது. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் முக்கியமான ஒன்று. அடிலெய்டில் நடந்த இந்த ஆட்டத்தில் விராட் கோலியின் சதத்தின் (107 ரன்) உதவியுடன் இந்தியா நிர்ணயித்த 301 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 224 ரன்னில் சுருண்டது. இந்திய அணி, பாகிஸ்தானுடன் தோற்றதில்லை என்ற வரலாறு இந்த உலக கோப்பையிலும் நீடித்தது. இந்த ஆட்டத்தை உலகம் முழுவதும் 100 கோடிக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர்.

இதே போல் ‘ஏ’ பிரிவில் பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி தோல்வியே சந்திக்காமல் 6 லீக்கிலும் வெற்றிகளை வாரி குவித்தது. அதிர்ச்சி தோல்வி என்று பார்த்தால் இங்கிலாந்து அணி, வங்காளதேசத்திடம் வீழ்ந்தது. இதனால் அந்த அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போய் விட்டது.

கால்இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, நாக்-அவுட் சுற்றில் முதல்முறையாக வெற்றியை ருசித்தது. ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், நியூசிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசையும் வெளியேற்றின.

மற்றொரு கால்இறுதியில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை ஊதித்தள்ளி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ரோகித் சர்மா 90 ரன்களில் இருந்த போது இடுப்பு அளவு உயரத்துக்கு வந்த பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். பிறகு நடுவர் நோ-பால் என்று அறிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ரோகித் சர்மா 137 ரன்கள் (14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி வெற்றிக்கு வித்திட்டார். நடுவரின் தவறான தீர்ப்பால் தங்கள் அணி தோற்று விட்டதாக வங்காளதேச வீரர்கள் மட்டுமின்றி அந்த நாட்டு பிரதமரும் புலம்பி தீர்த்தது தனிக்கதை.

இதையடுத்து சிட்னியில் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 328 ரன்கள் குவித்தது. ஸ்டீவன் சுமித் சதம் (105 ரன்) அடித்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விராட் கோலி (1 ரன்), சுரேஷ் ரெய்னா (7 ரன்) சோபிக்காதது பின்னடைவை ஏற்படுத்தியது. இன்னொரு அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தெறிக்கவிட்டு முதல்முறையாக இறுதிசுற்றை எட்டி சாதனை படைத்தது.

போட்டியை நடத்திய ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன. குழுமியிருந்த 93 ஆயிரம் ரசிகர்களுக்கு மத்தியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்னில் முடங்கி ஏமாற்றம் அளித்தது. நியூசிலாந்து கேப்டன் பிரன்டன் மெக்கல்லம் ரன் ஏதும் எடுக்கவில்லை. உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் டக்-அவுட் ஆன முதல் கேப்டன் என்ற அவச்சாதனை அவரது வசம் சென்றது. எளிய இலக்கை மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. 5-வது முறையாக உலக கோப்பையை சொந்தமாக்கிய ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் அரங்கில் மறுபடியும் வலுவாக காலூன்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. வேறு எந்த அணியும் உலக கோப்பையை 2 முறைக்கு மேல் வென்றதில்லை. மேலும் 5 விதமான கண்டங்களில் உலக கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றது.

இத்துடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மைக்கேல் கிளார்க், இந்த உலக கோப்பையை பந்து தாக்கி மரணம் அடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கமுடன் கூறினார்.

இந்த உலக கோப்பையை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இரு அணிகளுமே தலா ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றன. ஆஸ்திரேலியா லீக்கில் (நியூசிலாந்துக்கு எதிராக) தோற்றது. நியூசிலாந்து அணியோ இறுதி ஆட்டத்தில் சொதப்பி கோப்பையை கோட்டை விட்டு விட்டது.

மொத்தம் 49 ஆட்டங்கள் நடந்தன. ரன்மழை பொழியப்பட்ட உலக கோப்பை தொடராக இது அமைந்தது. 28 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டன. இவற்றில் 3 ஆட்டத்தில் 400 ரன்களுக்கு மேலாகவும் ஸ்கோர் சென்றது. இது வேறு எந்த உலக கோப்பையிலும் நடந்திராத ஒரு சாதனையாகும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 417 ரன்கள் குவித்து உலக கோப்பையில் அதிகபட்ச ரன்களை திருத்தி அமைத்தது. மொத்தம் 2,164 பவுண்டரிகளும், 463 சிக்சர்களும் அடிக்கப்பட்டன.

அதிக ரன்கள் குவித்தோர் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலும் (547 ரன்), பந்து வீச்சில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், நியூசிலாந்தின் டிரென்ட் பவுல்ட் (தலா 22 விக்கெட்) ஆகியோரும் முதலிடத்தை பிடித்தனர்.

முதல்முறையாக இரட்டை சதம் கிறிஸ் கெய்ல்: இந்த உலக கோப்பையில் முதல்முறையாக இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் ஒன்றல்ல, இரண்டு முறை. ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 215 ரன்கள் (10 பவுண்டரி, 16 சிக்சர்) நொறுக்கினார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் இரட்டை செஞ்சுரியை சுவைத்த முதல் வீரர் என்ற சரித்திரத்தை அவர் படைத்தார். இந்த ஆட்டத்தில் அவரும், சாமுவேல்சும் (133 ரன்) இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 372 ரன்கள் திரட்டினர். ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது பதிவானது.

நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலும் இரட்டை சதம் அடித்தார். கப்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கால்இறுதியில் 237 ரன்கள் (24 பவுண்டரி, 11 சிக்சர்) விளாசி திகைக்க வைத்தார். உலக கோப்பை போட்டியில் ஒரு வீரரின் தனிநபர் அதிகபட்சம் இது தான்.

தொடர்ச்சியாக 4 சதம் அடித்து சங்கக்கரா சாதனை: இந்த உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் சங்கக்கரா புதிய சகாப்தம் படைத்தார். வங்காளதேசம் (105 ரன்), இங்கிலாந்து (117 ரன்), ஆஸ்திரேலியா (104 ரன்), ஸ்காட்லாந்து (124 ரன்) ஆகிய அணிகளுக்கு எதிராக வரிசையாக சதம் அடித்து மிரட்டினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் சதம் அடித்த முதல் வீரர், உலக கோப்பை தொடர் ஒன்றில் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் ஆகிய அரிய சிறப்புகளுடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

Next Story