கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல் + "||" + Against New Zealand Training in cricket The Indian team failed

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்

நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய அணி தோல்வி பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.
லண்டன்,

10 அணிகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

லண்டனில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் சந்தித்தன. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. எதிரணியின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ரோகித் சர்மா (2 ரன்), ஷிகர் தவான் (2 ரன்), லோகேஷ் ராகுல் (6 ரன்) ஒற்றை இலக்கில் நடையை கட்டினர். மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் வேகப்பந்து வீச்சு நன்கு எடுபட்டது.


‘ரன் குவிக்கும் எந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் கேப்டன் விராட் கோலியும் (18 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அவரை கிரான்ட்ஹோம் ‘கிளன் போல்டு’ ஆக்கினார். சூழலை கணித்து அதற்கு ஏற்ப பேட்டிங் செய்ய தவறிய இந்திய வீரர்கள் ஏனோ, தானோ என்று அவசர கோலத்தில் விக்கெட்டை தாரை வார்த்தனர். ஹர்திக் பாண்ட்யா (30 ரன், 37 பந்து, 6 பவுண்டரி), டோனி (17 ரன், 42 பந்து) ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்க எடுத்த முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. தினேஷ் கார்த்திக்கும் (4 ரன்) வந்த வேகத்தில் வெளியேறினார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து மோசமான நிலையில் தத்தளித்தது. இதன் பின்னர் ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை கவுரவமான நிலைக்கு உயர்த்தி ஆறுதல் அளித்தனர். இவர்கள் 9-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தனர். ஜடேஜா 54 ரன்களிலும் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குல்தீப் யாதவ் 19 ரன்களிலும் கேட்ச் ஆனார்கள். முடிவில் இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்களில் ஆட்டம் இழந்தது. நியூசிலாந்து தரப்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சுலபமாக வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் (71 ரன்), கேப்டன் வில்லியம்சன் (67 ரன்) அரைசதம் அடித்தனர். இந்திய தரப்பில் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், ஜடேஜா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கோலி கருத்து:  தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘நாங்கள் திட்டமிட்டபடி விளையாடவில்லை. இங்கிலாந்தில் சில இடங்களில் மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவாகும் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். இந்த மாதிரியான சூழலில் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் ஜொலிக்காமல் போனால், பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியை தூக்கி நிறுத்த தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அதன் பிறகு 179 ரன்களை எட்டியது சிறப்பான முயற்சியாகும். ஹர்திக் பாண்ட்யா ரன் எடுத்த விதம், நெருக்கடியை குறைக்கும் வகையில் ஆடிய டோனி, ஜடேஜாவின் அரைசதம் இவை எல்லாம் இந்த ஆட்டத்தில் எங்களுக்கு நல்ல விஷயமாகும்’ என்றார்.

இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டங்கள்: இன்று, இரண்டு பயிற்சி ஆட்டங்கள் நடக்கின்றன. கார்டிப்பில் நடக்கும் ஒரு ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. பிரிஸ்டலில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சந்திக்கின்றன. இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது.

பீல்டராக டோனி: இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக டோனி செயல்படவில்லை. சிறிது நேரம் எல்லைக்கோடு அருகே பீல்டிங் செய்தார். விக்கெட் கீப்பிங் பணியை தினேஷ் கார்த்திக் கவனித்தார்.