கிரிக்கெட்

‘உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவோம்’ பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் சொல்கிறார் + "||" + Let's defeat India world cup

‘உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவோம்’ பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் சொல்கிறார்

‘உலக கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவோம்’ பாகிஸ்தான் தேர்வு குழு தலைவர் இன்ஜமாம் உல்-ஹக் சொல்கிறார்
இந்த உலக கோப்பை கிரிக்கெட்டின் போது இந்திய அணியை வீழ்த்தி தோல்விப்பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்-ஹக் கூறியுள்ளார்.
கராச்சி, 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அணியின் தேர்வுகுழு தலைவருமான இன்ஜமாம் உல்-ஹக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியை மக்கள் மிக தீவிரமாக எடுத்துக் கொண்டு உன்னிப்பாக கவனிக்கிறார்கள். உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே மகிழ்ச்சி அடைவோம் என்று கூட சிலர் சொல்கிறார்கள். உலக கோப்பை போட்டியில் நாங்கள் இதுவரை இந்தியாவை வென்றதில்லை. அந்த சோகத்தை இந்த உலக கோப்பையில் தகர்ப்போம் என்று உறுதியாக நம்புகிறேன். இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் மட்டுமல்ல, எல்லா ஆட்டங்களும் எங்களுக்கு முக்கியம் தான். எல்லா அணிகளையும் வீழ்த்தக்கூடிய திறமை எங்கள் அணியினரிடம் உள்ளது.

உலக கோப்பை போட்டிக்கான 14-15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வது எளிதான பணி அல்ல. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் தான் அணியை தேர்வு செய்கிறோம். உதாரணமாக திறமையான நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ள நிலையில், அவர்களில் குறிப்பிட்ட வீரர்களை தேர்வு செய்வதற்கு கடினமாக இருந்தது. மிகுந்த கவனமுடன் தான் முகமத் ஹஸ்னனை தேர்வு செய்தோம். மற்ற பவுலர்கள் சராசரியாக மணிக்கு 130 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் நிலையில், ஹஸ்னன் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகிறார். அதனால் அவரை எங்களது பந்து வீச்சு கூட்டணியில் இணைத்துள்ளோம்.

அரைஇறுதி அணிகள்

உலக கோப்பை போட்டியில் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளமாட்டோம். ஆப்கானிஸ்தான் கூட பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். என்னை பொறுத்தவரை ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினாலும், இங்கிலாந்துக்கு எதிரான ஆடினாலும் வெற்றி பெற்றால் கிடைப்பது 2 புள்ளி தான். வெற்றியுடன் போட்டியை தொடங்குவது மிகவும் முக்கியமானது. அதை செய்வதற்குரிய திறமை எங்களிடம் உண்டு. இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும் என்பது எனது கணிப்பாகும்.

இவ்வாறு இன்ஜமாம் கூறினார்.

இந்த உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 16-ந்தேதி மான்செஸ்டரில் மோதுகின்றன. உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் அணி இதுவரை இந்தியாவுக்கு எதிராக மோதியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவியிருக்கிறது.