கிரிக்கெட்

உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம் + "||" + An overview of the World Cup stadiums

உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்

உலக கோப்பை மைதானங்கள் ஒரு கண்ணோட்டம்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இங்கிலாந்தில் தொடங்குகிறது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் (வியாழக்கிழமை) இங்கிலாந்தில் தொடங்குகிறது. மொத்தம் 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இங்கு இது வெயில் காலம் என்பதால் ஆடுகளம் நன்கு உலர்ந்து பேட்டிங்குக்கு சொர்க்கபுரியாக இருக்கும். அதே சமயம் மழை பெய்தாலோ அல்லது மேகமூட்டமான சீதோஷ்ண நிலை உருவானாலோ காற்றின் ஈரப்பதம் காரணமாக ஆடுகளத்தன்மை உடனடியாக மாறி விடும். பந்து நன்கு ஸ்விங் ஆகி, வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதற்கு ஏற்ப ஆடுவது தான் பேட்ஸ்மேன்களுக்கு உள்ள சவாலாகும். உலக கோப்பை போட்டி நடக்கும் மைதானங்கள் பற்றிய ஒரு கண்ணோட்டம் வருமாறு:-


லண்டன் லார்ட்ஸ்: உலக புகழ்பெற்ற இந்த ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி உள்பட மொத்தம் 5 ஆட்டங்கள் நடக்கின்றன. உலக கோப்பை இறுதிப்போட்டி இங்கு அரங்கேற இருப்பது இது 5-வது நிகழ்வாகும்.

28 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் இதுவரை 61 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு இங்கிலாந்து அணி 53 ஆட்டங்களில் விளையாடி 24-ல் வெற்றி பெற்றுள்ளன. இந்திய அணி 8 ஆட்டங்களில் பங்கேற்று அதில் 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. மற்றொரு ஆட்டம் ‘டை’ ஆனது. 1975-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்தது ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு எதிராக 107 ரன்னில் சுருண்டது இங்கு மோசமான ஸ்கோர் ஆகும். மொத்தம் 30 சதங்கள் பதிவாகியுள்ளன. ஆனால் ஒரு நாள் கிரிக்கெட்டில் இங்கு எந்த இந்தியரும் சதம் கண்டதில்லை. தற்போதைய உலக கோப்பையில் இந்திய அணிக்கு இங்கு எந்த லீக் ஆட்டங்களும் கிடையாது. இறுதி சுற்றை எட்டினால் மட்டுமே லார்ட்சில் கால் பதிக்க முடியும்.

பிரிஸ்டல்: 17,500 இருக்கை வசதி கொண்ட இந்த மைதானத்தில் 3 ஆட்டங்கள் நடக்கின்றன. இதற்கு முன்பு 17 ஒரு நாள் போட்டிகள் நடந்துள்ளன.

நாட்டிங்காம்: இங்கு 5 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்தியா-நியூசிலாந்து மோதலும் அடங்கும். பேட்டிங்குக்கு நட்புறவான இந்த மைதானத்தில் தான் இங்கிலாந்து அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு 481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இந்திய அணி இங்கு 6 ஆட்டங்களில் ஆடி தலா 3-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் கண்டுள்ளது.

மான்செஸ்டர்: அரைஇறுதி உள்பட 6 ஆட்டங்களை நடத்தும் வாய்ப்பை பெற்றுள்ள இந்த மைதானத்தில் 26 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இங்கு பரம வைரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் லீக் ஆட்டம் வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இந்த ஆட்டத்திற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டது நினைவு கூரத்தக்கது.

இதுவரை 46 ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன. 1984-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் 189 ரன்கள் விளாசினார். இந்த நாள் வரைக்கும் இங்கிலாந்து மண்ணில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இது நீடிக்கிறது.

லண்டன் ஓவல்: பழமையான மைதானங்களில் ஒன்றான லண்டன் ஓவலில் 25,500 ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்க்க முடியும். இங்கு 5 லீக் ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டமும் ஒன்றாகும். இங்கு 19 முறை 300 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டுள்ளன. 36 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஷிகர் தவான் எடுத்த இரு செஞ்சுரியும் அடங்கும்.

மற்ற மைதானங்களான கார்டிப், லீட்சில் தலா 4 ஆட்டங்கள், செஸ்டர்-லீ-ஸ்டிரிட், டவுன்டானில் தலா 3 ஆட்டங்கள், சவுதம்டன், நாட்டிங்காமில் தலா 5 ஆட்டங்கள் நடக்கின்றன.