உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்


உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: இந்தியா-வங்காளதேசம் இன்று மோதல்
x
தினத்தந்தி 27 May 2019 11:30 PM GMT (Updated: 27 May 2019 11:02 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

கார்டிப்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி திருவிழா இங்கிலாந்தில் நாளை மறு நாள் (30-ந் தேதி) முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த 24-ந் தேதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இந்தியா-வங்காளதேசம்

இன்று (செவ்வாய்க்கிழமை) 2 பயிற்சி ஆட்டங்கள் நடக்கிறது. கார்டிப்பில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதுகின்றன. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக ஆடவில்லை. தேவையற்ற ஷாட்களை ஆடி சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரவீந்திர ஜடேஜா (54 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (30 ரன்கள்) மட்டுமே சற்று நிலைத்து நின்று ஆடினார்கள்.

எனவே இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி நல்ல நிலைக்கு திரும்பி நம்பிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியமானதாகும். மோர்தசா தலைமையிலான வங்காளதேச அணி தனது முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோத இருந்தது. மழை காரணமாக இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ்

பிரிஸ்டலில் நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணியை சந்திக்கின்றது. இந்திய அணியை வீழ்த்தி இருந்த நியூசிலாந்து அணி தனது வெற்றியை தொடர முயலும். வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதியது. மழையால் இந்த ஆட்டம் பாதியில் ரத்தானது. எனவே இந்த ஆட்டத்தை சரியாக பயன்படுத்தி கொள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி தீவிரம் காட்டும்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story