கலக்கப்போகும் கதாநாயகர்கள்


கலக்கப்போகும் கதாநாயகர்கள்
x
தினத்தந்தி 28 May 2019 9:15 PM GMT (Updated: 28 May 2019 9:07 PM GMT)

ஒவ்வொரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் குறிப்பிட்ட வீரர்களின் ஆட்டங்களை பார்க்க ரசிகர்கள் தவம் கிடப்பார்கள்.

வ்வொரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் குறிப்பிட்ட வீரர்களின் ஆட்டங்களை பார்க்க ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். அந்த வகையில் இந்த உலக கோப்பையிலும் ஒரு சில வீரர்களின் ஆட்டம் கவனத்தை ஈர்க்கும். அத்தகைய வீரர்கள் பற்றி ஒரு பார்வை:-

விராட் கோலி (இந்திய கேப்டன்): ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு அதிக ரன்கள் குவித்தவர் (69 ஆட்டத்தில் 19 சதத்துடன் 4,306 ரன்) இவர் தான். கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் விமர்சனங்களை தவிடிபொடியாக்கும் வகையில் ரன்வேட்டை நடத்திய விராட் கோலி இந்த உலக கோப்பையிலும் அமர்க்களப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 2011, 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 17 ஆட்டங்களில் விளையாடி 2 சதம் மட்டுமே அடித்துள்ள கோலி இந்த முறை அந்த எண்ணிக்கையை உயர்த்துவார் என்று நம்பலாம்.

கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்): ‘சிக்சர் மன்னன்’ என்ற அடைமொழியோடு வலம் வரும் 39 வயதான கிறிஸ் கெய்ல் இந்த உலக கோப்பையுடன் ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு விடைகொடுக்கிறார். பந்தை எல்லைக்கோட்டிற்கு விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்துவதே தனது லட்சியம் என்று அடிக்கடி கூறும் கெய்ல் எதிரணி பந்துவீச்சை நொறுக்கித்தள்ள காத்திருக்கிறார். உலக கோப்பையில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற பெருமையை டிவில்லியர்சுடன் இணைந்து கெய்ல் (37 சிக்சர்) பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா): தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடையை அனுபவித்தாலும் டேவிட் வார்னரின் ஆட்டத்திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் முன்பை விட இப்போது இன்னும் ஆக்ரோஷமாக ஆடுகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் (ஒரு சதம், 8 அரைசதத்துடன் 692 ரன்) முதலிடம் பிடித்த வார்னர், தனது சீரிய பங்களிப்பின் மூலம் இந்த உலக கோப்பையை சொந்தமாக்கி தவறுகளுக்கு பரிகாரம் தேடும் முனைப்புடன் உள்ளார்.

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து): மிடில் வரிசையில் இறங்கி மின்னல்வேகத்தில் ஆடக்கூடிய ஒரு பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்திருக்கும் ஜோஸ் பட்லர், உள்ளூர் ரசிகர்களின் ஹீரோவாக ஜொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா): வித்தியாசமாக பவுலிங் செய்யக்கூடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உலக தரவரிசையில் நம்பர் ஒன் இடம் வகிக்கிறார். துல்லியமாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டுவதில் கில்லாடியான 25 வயதான பும்ரா இதுவரை 49 ஆட்டங்களில் 85 விக்கெட்டுகள் சாய்த்து இருக்கிறார். ஓவருக்கு சராசரியாக 4.51 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தை காட்டியுள்ள பும்ரா இந்திய பந்து வீச்சின் துருப்பு சீட்டாக இருப்பார்.

ஷித் கான் (ஆப்கானிஸ்தான்): குறுகிய காலத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு வீரர், ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான். 2015-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் (65 ஆட்டத்தில் 100 விக்கெட்) இவர் தான். சுழலில் வேகத்தையும், வித்தியாசத்தையும் காட்டி பேட்ஸ்மேன்களை அலற விடுபவர் ரஷித்கான். இந்த உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணி ஏதாவது ஆட்டங்களில் வெற்றி பெற்றால், அதில் ரஷித்கானின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும்.

இவர்களை தவிர்த்து நியூசிலாந்து பவுலர் டிரென்ட் பவுல்ட், பேட்டிங்கில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவரான பாபர் அசாம் (பாகிஸ்தான்), தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காஜிசோ ரபடா, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், வெஸ்ட் இண்டீசின் ஆந்த்ரே ரஸ்செல், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆகியோரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Next Story