கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் நாளில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை + "||" + World Cup cricket tournament starts today

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் நாளில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் நாளில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை
இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லண்டன், 

இன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14–ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5–வது முறையாகும்.

2015–ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன. ஆனால் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்யும் வகையில் இந்த உலக கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டு விட்டது. சிறிய அணிகள் அதாவது ஐ.சி.சி. உறுப்புநாடுகள் எதுவும் இடம் பெறாத ஒரு போட்டியாக இது நடக்கிறது.

இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992–ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

இங்கிலாந்து எப்படி?

முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. அசுர பலம்வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 6 ஒரு நாள் தொடர்களில் 5–ஐ (மற்றொரு தொடர் சமன்) கைப்பற்றி அசத்தி இருக்கிறது. அண்மைகால இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை பார்த்தால், சகட்டுமேனிக்கு அதிரடி காட்டி எதிரணி பவுலர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார்கள்.

குறிப்பாக ஜோஸ் பட்லர், கேப்டன் மோர்கன், ஜாசன் ராய் ஆகியோர் சந்திக்கும் முதல் பந்தில் இருந்தே ‘கதகளி’ ஆடத் தொடங்கி விடுவார்கள். முதலில் பேட் செய்தால் 300 ரன்கள் மேல் எடுத்து விட வேண்டும் என்பது அவர்களது இலக்கு. அதுவும் இது சொந்த ஊர் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘ராஜ்ஜியம்’ தூக்கலாகவே இருக்கும்.

தென்ஆப்பிரிக்க அணி

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் மட்டுமே பேட்டிங்கில் திருப்திகரமான பார்மில் உள்ளனர். அதற்காக மற்றவர்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. காஜிசோ ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி உள்ளிட்டோர் சாதுர்யமாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கக்கூடிய திறமை சாலிகள். மூத்த வீரர் ஸ்டெயின் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. இந்த உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக விளையாடிய மூன்று ஒரு நாள் தொடர்களையும் (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக) வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும்.

இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதி சுற்றுக்கு வந்தும் உலக கோப்பையை வென்றதில்லை. தென்ஆப்பிரிக்க அணியோ அரைஇறுதியை தாண்டியதில்லை. தங்களது உலக கோப்பை கனவுக்கு அச்சாரம் போட தொடரை வெற்றியோடு தொடங்குவது மனரீதியாக நம்பிக்கையை அளிக்கும். இரு அணி வீரர்களும் களத்தில் ‘நீயா–நானா’ என்று ஆக்ரோ‌ஷமாக ஆடுவார்கள் என்பதால் அனல் பறக்கும். ரசிகர்களுக்கோ குதூகலமான விருந்து கிடைக்கும்.

பிற்பகல் 3 மணிக்கு...

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் அல்லது மார்க் வுட்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், பிரிட்டோரியஸ் அல்லது கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

‘ஸ்டெயின் இல்லாதது இழப்பு’– பிளிஸ்சிஸ்

தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘எங்களது பிரதான பலமே, வேகப்பந்து வீச்சு தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். ஸ்டெயின், ரபடா, நிகிடி ஆகியோர் இங்கிலாந்து சூழலில் அச்சுறுத்தக்கூடியவர்கள். ஆனால் காயத்தில் இருந்து மீளாததால் ஸ்டெயின் இந்த ஆட்டத்தில் ஆடமாட்டார். இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் இல்லாததால் அணிச்சேர்க்கை மற்றும் திட்டமிடலிலும் கொஞ்சம் மாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ரபடா அணியை முன்னெடுத்து செல்வார். களத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும். நான் ஆலோசனை சொல்ல வேண்டிய தேவையில்லை.

கோப்பையை வெல்லும் வாய்ப்பில் எங்களை குறைத்து மதிப்பிடுவதால் அது நெருக்கடியை வெகுவாக குறைக்கும். எது எப்படி என்றாலும் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது முக்கியம்.’ என்றார்.

அணியில் காயப்பிரச்சினை இல்லை–மோர்கன்

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், ‘சொந்த மண்ணில் உலக கோப்பையை வெல்லும் போது அது இங்கிலாந்து கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருக்கும். இங்குள்ள சிறுவர்களுக்கு தங்களது விளையாட்டாக கிரிக்கெட்டை தேர்வு செய்ய இது உந்துசக்தியாக அமையும். அதை நோக்கி எங்களது பயணம் இருக்கும்.

எனக்கு விரலில் ஏற்பட்ட காயம் சரியாகி விட்டது. அணியில் தற்போது காயப்பிரச்சினை ஏதும் இல்லை. அனைத்து வீரர்களும் முழு உடல்தகுதியுடன் உள்ளனர். ஆடும் லெவன் அணியை தேர்வு செய்து விட்டோம். ஆனால் போட்டி முன்பாகவே அதை தெரியப்படுத்துவேன்’ என்றார்.

பயிற்சியின் போது இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட்டை சந்தித்து பேசியது உற்சாகம் அளித்தது. அவரது அனுபவங்களும், ஆலோசனையும் எங்களை மனரீதியாக வலுப்படுத்தி இருப்பதாக நம்புகிறேன் என்றும் மோர்கன் குறிப்பிட்டார்.