தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து


தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இங்கிலாந்து
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 9:11 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

உலக கோப்பை கிரிக்கெட்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று தொடங்கியது. ஜூலை 14-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் இங்கிலாந்து, இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 5 வெற்றிகள் தேவைப்படும். லண்டன் ஓவலில் நேற்று அரங்கேறிய தொடக்க ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் இங்கிலாந்து அணியின் இன்னிங்சை தொடங்கினர். பொதுவாக ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சு தாக்குதலை தொடுக்கும் தென்ஆப்பிரிக்க அணி ஆச்சரியப்படும் வகையில் முதல் ஓவரிலேயே சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரை பயன்படுத்தியது. தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ்சின் இந்த வியூகத்துக்கு உடனடியாக பலன் கிடைத்தது. 2-வது பந்திலேயே பேர்ஸ்டோ (0) தாஹிரின் சுழலில் சிக்கி விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் ஆனார்.

மோர்கன் சாதனை

இந்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து அணியை ஜாசன் ராயும், ஜோ ரூட்டும் காப்பாற்றினர். சீரான வேகத்தில் ஸ்கோரை நகர்த்திய இவர்கள் 17-வது ஓவரில் அணியின் ஸ்கோரை 100 ரன்களை தொட வைத்தனர். இருவரும் அரைசதத்தை கடந்த நிலையில் அடுத்தடுத்து வெளியேறினர். ஜாசன் ராய் 54 ரன்களிலும் (53 பந்து, 8 பவுண்டரி), ஜோ ரூட் 51 ரன்களிலும் (59 பந்து, 5 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர்.

இதன் பின்னர் கேப்டன் இயான் மோர்கனும், ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்சும் கைகோர்த்து ரன்ரேட்டை சரிய விடாமல் பார்த்துக் கொண்டனர். பவுண்டரியுடன் ரன் வேட்டையை தொடங்கிய மோர்கன், நிகிடியின் பந்து வீச்சில் 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். பிரிஸ்டோரியசின் ஒரே ஓவரில் ஸ்டோக்ஸ் 3 பவுண்டரிகளை விரட்டியடித்தார். மோர்கன் 27 ரன் எடுத்த போது, ஒரு நாள் கிரிக்கெட்டில் 7 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சிறப்போடு அரைசதத்தை பூர்த்தி செய்த மோர்கன் 57 ரன்களில் (60 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து பந்தை தூக்கிய போது கேட்ச் ஆகிப்போனார்.

இங்கிலாந்து 311 ரன்

அடுத்து வந்த அதிரடி மன்னன் ஜோஸ் பட்லருக்கு (18 ரன்) நிகிடியின் பந்து வீச்சில் ஸ்டம்பு கழன்றது. மறுமுனையில் சதத்தை நெருங்கிய பென் ஸ்டோக்ஸ் 49-வது ஓவரில் ரிவர்ஸ் ஷாட் அடிக்க முயற்சித்து கேட்ச் ஆனார். பென் ஸ்டோக்ஸ் 89 ரன்கள் (79 பந்து, 9 பவுண்டரி) எடுத்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 340 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது. ஆனால் தென்ஆப்பிரிக்காவின் அபாரமான பந்து வீச்சு மற்றும் சிறப்பான பீல்டிங்கால் இங்கிலாந்தின் ரன்வேகம் கொஞ்சம் குறைந்து போனது. உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இங்கிலாந்து 300 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் நிகழ்வாகும்.

பவுன்சர் பந்து தாக்கியது

பின்னர் 312 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களை வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ‘ஷாட்பிட்ச்’ பந்துகளை போட்டு மிரட்டினார். அவர் வீசிய ஒரு ‘பவுன்சர்’ பந்து தொடக்க ஆட்டக்காரர் அம்லாவை ஹெல்மெட்டோடு பலமாக தாக்கியது. இதனால் அதிர்ந்து போன அம்லா சிகிச்சை பெறுவதற்காக வெளியேறினார். அவருக்கு பிறகு இறங்கிய மார்க்ராம் (11 ரன்), கேப்டன் பிளிஸ்சிஸ் (5 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை ஜோப்ரா ஆர்ச்சர் கபளகரம் செய்தார்.

இதனால் நெருக்கடிக்குள்ளான தென்ஆப்பிரிக்க அணியை விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும், வான்டெர் துஸ்செனும் இணைந்து ஓரளவு மீட்டனர். ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் தென்ஆப்பிரிக்கா மறுபடியும் தடம் புரண்டது. அணியின் ஸ்கோர் 129 ரன்களை எட்டிய போது டி காக் 68 ரன்களில் (74 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) பிளங்கெட் வீசிய பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். வான்டெர் துஸ்சென் தனது பங்குக்கு 50 ரன்கள் எடுத்தார்.

தென்ஆப்பிரிக்கா தோல்வி

பந்து தாக்கியதால் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறிய அம்லா மீண்டும் களம் திரும்பி 13 ரன்னில் வீழ்ந்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென தாரைவார்த்த தென்ஆப்பிரிக்க அணி 39.5 ஓவர்களில் 207 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் ‘மெகா’ வெற்றி பெற்றது. உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்க அணியின் 2-வது மோசமான தோல்வி இதுவாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆல்-ரவுண்டராக ஜொலித்த பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Next Story