பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்


பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 30 May 2019 11:00 PM GMT (Updated: 30 May 2019 9:28 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

நாட்டிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ் மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2–வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 2–வது லீக் ஆட்டத்தில் சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி, ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது. அத்துடன் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. வங்காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்தானது.

எழுச்சி பெற்றுள்ள வெஸ்ட்இண்டீஸ்

1992–ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான் கணிக்க முடியாத ஒரு அணியாகும். தனக்குரிய நாளில் அந்த அணி எந்த அணியையும் வீழ்த்தும் வல்லமை படைத்தது. பாபர் அசாம், பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் முகமது அமிர், ‌ஷதப் கான், ஆசிப் அலி ஆகியோர் சரியான பங்களிப்பை அளிப்பார்கள் எனலாம்.

1970–களில் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திய வெஸ்ட்இண்டீஸ் அணி சமீப காலங்களில் சரிவை சந்தித்தது. சமீபத்தில் அயர்லாந்தில் ந+டந்த 3 நாடுகள் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணி, வங்காளதேச அணியிடம் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. கிறிஸ் கெய்ல், ஆந்த்ரே ரஸ்செல், இவின் லீவிஸ் ஆகியோர் அணிக்கு திரும்பி இருப்பதால் வெஸ்ட்இண்டீஸ் புதிய எழுச்சி கண்டு இருப்பதை உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் பார்க்க முடிந்தது. நியூசிலாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணி 421 ரன்கள் குவித்ததுடன் 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விறுவிறுப்பு

வெஸ்ட்இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டக்காரர்களும், ஆல்–ரவுண்டர்களும் அதிகம் இருக்கிறார்கள். அந்த அணியின் பந்து வீச்சு பக்க பலமாக அமைந்து விட்டால் அந்த அணி வலுவான அணிக்கும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நாட்டிங்காமில் இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றாலும் மேகமூட்டம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து வீச்சு எடுபட வாய்ப்பு உள்ளது. அதேநேரத்தில் பேட்டிங்குக்கு அனுகூலமான இந்த மைதானத்தில் ரன் குவிப்புக்கு பஞ்சம் இருக்காது.

கணிக்க முடியாத இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தின் முடிவை கணிப்பது கடினமானதாகும். இரு அணிகளும் வெற்றியுடன் போட்டியை தொடங்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

அணி வீரர்கள்

இன்றைய ஆட்டத்துக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

பாகிஸ்தான்: இமாம் உல்–ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல் அல்லது முகமது ஹபீஸ், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), இமாத் வாசிம் அல்லது சோயிப் மாலிக், ஆசிப் அலி, ‌ஷதப்கான், முகமது அமிர், ஹசன் அலி, ‌ஷகீன் அப்ரிடி.

வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், இவின் லீவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், டேரன் பிராவோ, ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), ஆந்த்ரே ரஸ்செல், ஆஷ்லே நர்ஸ், கெமார் ரோச், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ் அல்லது ‌ஷனோன் கேப்ரியல்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

பாகிஸ்தான்–வெஸ்ட்இண்டீஸ்

6 தரவரிசை 8

60 வெற்றி இதுவரை நேருக்கு நேர் 133 (டை 3) 70 வெற்றி

3 வெற்றி உலக கோப்பையில் நேருக்கு நேர் 10: 7 வெற்றி


Next Story