இன்று 2 லீக் ஆட்டங்கள் நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்


இன்று 2 லீக் ஆட்டங்கள் நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
x
தினத்தந்தி 31 May 2019 10:15 PM GMT (Updated: 31 May 2019 9:25 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

கார்டிப்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. நியூசிலாந்து–இலங்கை, ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

நியூசிலாந்து–இலங்கை மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று (சனிக்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப்பில் அரங்கேறும் 3–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–இலங்கை அணிகள் மோதுகின்றன.

1996–ம் ஆண்டு சாம்பியனான இலங்கை அணி கருணாரத்னே தலைமையில் களம் காணுகிறது. சமீப காலங்களில் இலங்கை அணியின் செயல்பாடு சிறப்பாக அமையவில்லை. அந்த அணி தனது கடைசி 9 ஒரு நாள் போட்டியில் 8–ல் தோல்வியை சந்தித்தது. உலக கோப்பை பயிற்சி ஆட்டங்களில் இலங்கை அணி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி கண்டது. இளம் வீரர்களை அதிகம் கொண்ட இலங்கை அணி ஒருங்கிணைந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இருப்பினும் கூட்டாக சிறப்பாக செயல்பட்டால் அந்த அணியால் மற்ற அணிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் ஆற்றல் உண்டு.

டாம் லாதம் ஆடுவது சந்தேகம்

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நல்ல நிலையில் உள்ளது பேட்டிங்கில் மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் ஆகியோரும் பவுலிங்கில் டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, மிட்செல் சான்ட்னெர் ஆகியோர் சிறந்த நிலையில் இருக்கிறார்கள். உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. காயத்தால் அவதிப்பட்டு வரும் டாம் லாதம் இன்றைய ஆட்டத்தில் ஆடுவது சந்தேகம் தான் என்று தெரிகிறது.

ரன் குவிப்புக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நியூசிலாந்து அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த இலங்கை அணி கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் கையே ஓங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் பிளன்டெல், காலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீ‌ஷம், மிட்செல் சான்ட்னெர், டிரென்ட் பவுல்ட், டிம் சவுதி, சோதி.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), திரிமன்னே, குசல் மென்டிஸ், குசல் பெரேரா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, மலிங்கா, சுரங்கா லக்மல், ஜெப்ரே வாண்டர்சே.

ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான்

பிரிஸ்டலில் இன்று நடைபெறும் 4–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, கத்து குட்டி அணியான ஆப்கானிஸ்தானை சந்திக்கிறது. ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் வருகைக்கு பிறகு வலுவான நிலையை எட்டி இருக்கும் ஆஸ்திரேலிய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, இலங்கையை சாய்த்தது. தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு வரும் டேவிட் வார்னர் உடல் தகுதியை எட்டினால் தான் இன்றைய ஆட்டத்தில் ஆடுவார் என்று தெரிகிறது.

ஆப்கானிஸ்தான் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், ஆஸ்திரேலிய அணியினருக்கு எந்த அளவுக்கு குடைச்சல் கொடுப்பார் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியே வெற்றியை சுவைக்கும் என்பதே எல்லோருடைய கணிப்பாகும். இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடியாக ஒளிபரப்புகிறது.

அணி வீரர்கள்

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா அல்லது ஷான் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் கவுல்டர் நிலே, நாதன் லயன் அல்லது ஆடம் ஜம்பா.

ஆப்கானிஸ்தான்: ஹஸ்ரத்துல்லா ஜஜாய், முகமது ஷாசத், நூர் அலி ஜட்ரன், ஹஸ்மத்துல்லா ‌ஷகிடி, அஸ்ஹார் ஆப்கன், குல்படின் நைப் (கேப்டன்), நஜிபுல்லா ஜட்ரன், தவ்லத் ஜட்ரன், முகமது நபி, ரஷித் கான், அப்தாப் ஆலம்.

நியூசிலாந்து–இலங்கை

4 தரவரிசை 9

இதுவரை நேருக்கு நேர் 98 (டை 1, முடிவு இல்லை 8)

48 வெற்றி 41 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர் 10

4 வெற்றி, 6 வெற்றி

ஆஸ்திரேலியா–ஆப்கானிஸ்தான்

5 தரவரிசை 10

இதுவரை நேருக்கு நேர் 2

2 வெற்றி 0 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர் 1

1 வெற்றி, 0 வெற்றி


Next Story