வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டி


வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டி
x
தினத்தந்தி 31 May 2019 10:00 PM GMT (Updated: 31 May 2019 9:29 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் எடுத்தது. ஜாசன் ராய் (54 ரன்), ஜோரூட் (51 ரன்), கேப்டன் இயான் மோர்கன் (57 ரன்), பென் ஸ்டோக்ஸ் (89 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்தனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், ரபடா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 39.5 ஓவர்களில் 207 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக குயின்டான் டி காக் 68 ரன்னும், வான்டெர் துஸ்சென் 50 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் நாங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் பெரிய ஸ்கோர் குவிக்க விரும்பினோம். ஆடுகளத்தின் தன்மை எங்களது திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இருப்பினும் அனுபவத்துடன் கூடிய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். இத்தகைய ஆட்டத்தை விளையாட கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங், பந்து வீச்சு மட்டுமன்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். பெலக்வாயோ அடித்த பந்தை பென் ஸ்டோக்ஸ் அருமையாக கேட்ச் செய்தார். மேட்ச் வின்னரான அவர் மற்ற வீரர்களுக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர். ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து அதற்கு தகுந்தபடி செயல்பட்டனர். ஆடுகளத்தின் தன்மை மெதுவாக இருந்தாலும் ஜோப்ரா ஆர்ச்சர் வேகமாகவும், துல்லியமாகவும் பந்து வீசினார். அவர் ஒவ்வொரு நாளும் முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பீல்டிங்கில் இதுபோல் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முயற்சிப்போம். போட்டி தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.

அம்லா காயம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பாப் டுபிளிஸ்சிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘நாங்கள் எல்லா துறைகளிலும் நன்றாக செயல்படவில்லை. தொடக்க ஆட்டக்காரர்களை விரைவில் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் தான் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரை முதலில் பந்து வீச வைத்தோம். அதற்கு பலனும் கிடைத்தது. இங்கிலாந்து அணியின் பேட்டிங் நன்றாக இருந்தது. அவர்கள் தரமான அணி என்பதை நிரூபித்து காட்டினார்கள். இதுபோன்ற பெரிய இலக்கை எட்ட நல்ல பார்ட்னர்ஷிப் ஆட்டம் அமைய வேண்டியது முக்கியமானது. பந்து தாக்கியதால் அம்லா விரைவில் வெளியேறியது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அவர் தற்போது நன்றாக இருக்கிறார். ஸ்டெயின் அணியில் இணைந்ததும் நாங்கள் மற்ற அணிகளை 300 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவோம்’ என்றார்.


Next Story