‘இந்திய அணிக்கு எனது அறிவுரை’ -கபில்தேவ்


‘இந்திய அணிக்கு எனது அறிவுரை’ -கபில்தேவ்
x
தினத்தந்தி 1 Jun 2019 11:30 AM GMT (Updated: 1 Jun 2019 11:30 AM GMT)

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் விறுவிறுப்பாகத் தொடங்கியிருக்கிறது.

இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி? இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்தவரும், உலகக் கோப்பை வென்ற மிக இளவயது கேப்டன் (24) என்ற பெருமையை இன்றுவரை தக்கவைத்திருப்பவருமான கபில்தேவின் பேட்டி...

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்கும் இந்திய அணி குறித்து தங்கள் கருத்து?

தற்போது இந்த விளையாட்டு மிகவும் பெரிதாகிவிட்டது. அணித் தேர்வு குறித்து ஒவ்வொருவரும் ஒரு கருத்து வைத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை தேர்வாளர்கள் அவர்கள் பணியைச் செய்திருக்கிறார்கள். இந்திய அணி கேப்டனும், நிர்வாகமும் தங்கள் பணியைச் செய்வார்கள், இந்திய அணி தனது ஆட்டங்களில் வெல்லும் என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவின் பேட்டிங், வலு குறைந்திருப்பதாக எண்ணுகிறீர்களா?

நான் அதைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. யாரையும் விரல் நீட்டிப் பேசுவது எளிது. தேர்வாளர்கள் ஐந்து பேரும், அணியில் யார் யாரை இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கேப்டனுடன் கலந்தாலோசித்துத்தான் முடிவெடுத்திருப்பார்கள். அவர்கள் இது பேட்டிங்கில் வலுவான அணி என்று நினைத்தால், நிச்சயம் வலுவான அணிதான்.

ஹர்திக் பாண்ட்யாவை கழித்துவிட்டுப் பார்த்தால், இந்திய அணியில் 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்கள்தான் இருக்கிறார்கள்...

ஹர்திக் பாண்ட்யாவை ஏன் வேகப்பந்துவீச்சாளராகக் கருதக்கூடாது?

சரி, நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் போதுமா?

ஒரு மாத காலத்தில் நீங்கள் 9 ஆட்டங்களில் ஆடப் போகிறீர்கள். யாராவது காயம் அடைந்தாலும், அவர்களுக்கு மாற்று வீரர்கள் இருக்கிறார்கள். இந்த 3 பிரதான வேகப்பந்துவீச்சாளர்களும், ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரும் போதும்.

இந்திய அணியில் ‘ஸ்பெஷலிஸ்ட் ஆப்-ஸ்பின்னர்’ யாரும் இல்லை. பல அணிகளில் இடதுகை ஆட்டக்காரர்கள் பலர் உள்ள நிலையில், ‘ஆப்-ஸ்பின்னர்’ இல்லாமல் நம்மால் சமாளிக்க முடியுமா?

முதலில் நாம், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்போம். நான், இப்படியிருந்தால், அப்படியிருந்தால் எனப் பேசத் தொடங்கினால், எல்லாமே எதிர்மறையாகப் போய்விடும். நான் நேர்மறையான எண்ணம் கொண்ட மனிதன். நமக்குள்ள அணி குறித்து நாம் சந்தோஷப்பட வேண்டும்.

அனைத்து 10 அணிகளும் எல்லா அணிகளுடனும் மோதும்படி உலகக் கோப்பை தொடர் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறதே?

இந்த முறை நல்லது. இதன் மூலம், ஒவ்வொரு அணியும் தங்களின் உண்மையான திறமையை அறிந்துகொள்ளலாம்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின், உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதுவதைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் மோதலில் டென்ஷன் கூடுமா?

ஒரு தனிநபர் அல்லது கிரிக்கெட் அணியை விட நாடு மேலானது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும். ‘தாராளமாகப் போய் விளையாடுங்கள்’ என்று நாடு சொல்கிறது என்றால், அதைப் பற்றி விவாதிக்கவே தேவையில்லை. இது ஒரு தொடர். இதில் விளையாடுவதற்கு எந்த வீரருக்காவது பிரச்சினை என்றால், அவர் விலகிக்கொள்ளலாம். அணி விளையாடுவது, விளையாடாமல் தவிர்ப்பது குறித்து முடிவெடுப்பது, அரசாங்கம், கிரிக்கெட் வாரியத்தின் உரிமை.

தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் என்று இந்தியாவின் முதல் நான்கு ஆட்டங்களும் கடினமானவை. இந்நிலையில், வெற்றியுடன் தொடங்குவது முக்கியமானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

வெற்றியுடன் தொடங்குவது எப்போதுமே நல்லது. அதனால் ஒரு சீரான நிலை உருவாகும். அது எப்போதும் முக்கியமானது. ஆனால் நமக்கு ஒன்பது போட்டிகள் இருப்பதால், ஒரு போட்டியில் தோற்றாலும்கூட மீண்டு எழுந்துவிட முடியும்.

உலகக் கோப்பையை வெல்வதற்கான சக்தியும் திறமையும் இந்தியாவுக்கு இருக்கிறதா?

நிச்சயம் இருக்கிறது. நமது அணியில் 3 நல்ல வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள், 3 சிறந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஹர்திக் பாண்ட்யா என்ற அபாரமான ஆல்ரவுண்டர் இருக்கிறார். உலகிலேயே சிறந்த பேட்ஸ்மேனும் துடிப்பான கேப்டனுமான விராட் கோலி இருக்கிறார். அப்புறம், டோனி. ரோகித், தவான் போன்றோரும் உள்ளனர். கோலியும் டோனியுமே அணிக்குப் பெரும் பலம்தான்.

டோனி மிக முக்கியமானவராக இருப்பாரா?

இல்லை, அவர் மட்டுமில்லை, எல்லோருமே முக்கியமானவர்கள்தான். குறிப்பிட்ட யாருக்கும் நெருக்கடியை உருவாக்க நான் விரும்பவில்லை. சில வீரர்கள் தூண்களைப் போன்றவர்கள் என்பது உண்மை. ஆனால் இது போன்ற பெரிய தொடரில், எல்லோரும் ஒன்றிணைந்து நன்றாகச் செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும்.

உலகக் கோப்பையில் எந்த அணி இந்தியாவுக்குச் சவாலாக இருக்கும்?

ஒவ்வொரு அணியுமே அச்சுறுத்தல்தான். ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் வங்காளதேசத்தைக் கூட எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. அப்படி எடுத்துக்கொண்டதால்தான், 2007 உலகக் கோப்பை போட்டியில் ஆரம்பத்திலேயே வெளியேறினோம். ஆக, உலகக் கோப்பையில் ஆடும்போது, ஒரு அணி வலுவானது, ஒரு அணி எளிதானது என்றெல்லாம் நாம் நினைக்க முடியாது. எல்லோரையும் ஒரே மாதிரித்தான் எதிர்கொள்ள வேண்டும்.

உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற முறையில், இந்திய அணிக்கு உங்களின் ஆலோசனை, அறிவுரை என்ன?

நான் கிரிக்கெட்டில் இருந்து விலகி 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்றைய அணி வீரர்களின் மனநிலை, அவர்களின் திட்டம் பற்றி எனக்குத் தெரியாது. எனவே திட்டவட்டமாக அறிவுரை கூறுவது சரியாக இருக்காது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம்... ஓர் அணியாக ஒன்றிணைந்து ஆடுங்கள், தனிநபராக அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்கும் வாய்ப்பிருந்தால், மற்றவர்களை எதிர்பார்க்காமல் வெற்றி தேடிக்கொடுங்கள். அது ரொம்பவே முக்கியமானது.

Next Story