சாதனை ஆடுகளத்தில் நடக்கிறது: இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடருமா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்


சாதனை ஆடுகளத்தில் நடக்கிறது: இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் தொடருமா? பாகிஸ்தானுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 2 Jun 2019 11:15 PM GMT (Updated: 2 Jun 2019 8:50 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இன்று பாகிஸ்தானை உலக சாதனை படைத்த ஆடுகளத்தில் சந்திக்கிறது.

நாட்டிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி இன்று பாகிஸ்தானை உலக சாதனை படைத்த ஆடுகளத்தில் சந்திக்கிறது.

வலுவான இங்கிலாந்து

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் நாட்டிங்காமில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 6–வது லீக் ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ அணியான இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை நாட்டிங்காமில் எதிர்கொள்கிறது.

தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 104 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புள்ளது. சூப்பர் பார்மில் உள்ள அந்த அணியில் ஜோ ரூட், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாசன் ராய், கேப்டன் மோர்கன் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சரவெடியாய் வெடிக்கக்கூடியவர்கள். பந்து வீச்சிலும் அந்த அணியை துளியளவும் குறைத்து மதிப்பிட முடியாது. உள்ளூரில் ஆடுவது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய அனுகூலமாகும். வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் காயத்தில் இருந்து குணமடைந்து விட்டதால் இந்த ஆட்டத்தில் சேர்க்கப்படலாம்.

தடுமாறும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை சமாளிக்க முடியாமல் 105 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இடைவிடாது தொடுத்த ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலில் பாகிஸ்தான் வீரர்கள் மிரண்டு போனார்கள். 6 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை.

இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. ஆனால் அசுரபலத்துடன் திகழும் இங்கிலாந்துக்கு சவால் அளிக்கும் வகையில் ஆடுமா? தொடர்ச்சியாக 11 ஒரு நாள் போட்டிகளில் சந்தித்து இருக்கும் தோல்விப்பயணத்துக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சாதனை ஆடுகளம்

பாகிஸ்தான் அணி மோசமாக தோற்ற அதே மைதானத்தில் தான் இன்றைய ஆட்டமும் நடக்கிறது. ஆனால் இந்த ஆட்டத்திற்கு வேறு ஆடுகளத்தை (பிட்ச்) பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடுகளத்தில் தான் இங்கிலாந்து இரண்டு முறை உலக சாதனை படைத்தது. அதாவது 2016–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு 444 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி, கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 481 ரன்கள் குவித்து வரலாற்று சாதனையை மாற்றி அமைத்தது.

அதே ஆடுகளத்தில் களம் காணுவதால் இந்த ஆட்டத்தில் ரன்மழையை உறுதியாக எதிர்பார்க்கலாம். ஆனாலும் தொடக்க கட்ட ஓவர்களில் கவனமுடன் ஆடுவது அவசியமாகும்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

இங்கிலாந்து: ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷித், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் அல்லது பிளங்கெட்.

பாகிஸ்தான்: இமாம் உல்–ஹக், பஹார் ஜமான், பாபர் அசாம், ஹாரிஸ் சோகைல், சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் அல்லது இமாத் வாசிம், ‌ஷதப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது அமிர்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

இங்கிலாந்து–பாகிஸ்தான்

1 தரவரிசை 6

இதுவரை நேருக்கு நேர் 87 (முடிவில்லை 3)

53 வெற்றி 31 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர் 9 (1 முடிவில்லை)

4 வெற்றி 4 வெற்றி


Next Story