தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி வங்காளதேசத்திடம் வீழ்ந்தது


தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி வங்காளதேசத்திடம் வீழ்ந்தது
x
தினத்தந்தி 2 Jun 2019 11:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:59 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

லண்டன், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

அம்லா நீக்கம்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் லண்டன் ஓவலில் நேற்று நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேச அணிகள் மோதின. தென்ஆப்பிரிக்க அணியில் இரு மாற்றமாக அம்லா, பிரிட்டோரியஸ் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் வங்காளதேசத்தை பேட் செய்ய பணித்தார்.

சிறப்பான தொடக்கம்

இதன்படி தமிம் இக்பாலும், சவும்யா சர்காரும் வங்காளதேசத்தின் இன்னிங்சை தொடங்கினர். நிகிடியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய சர்கார், மேலும் சில பவுண்டரிகளை விரட்டியடித்தார். நேர்த்தியாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் (8.2 ஓவர்) சேர்த்து அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். தமிம் இக்பால் 16 ரன்களில் ஆட்டம் இழந்தார். துரிதமான ரன் சேகரிப்பில் ஈடுபட்ட சர்கார் (42 ரன், 30 பந்து, 9 பவுண்டரி), கிறிஸ் மோரிஸ் வீசிய ஷாட்பிட்ச் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்-ஹசனும், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிமும் கைகோர்த்தனர். அனுபவம் வாய்ந்த இந்த ஜோடி தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு அசத்தியது. எகிறி வந்த பந்துகளையும் சர்வ சாதாரணமாக ரன்களாக மாற்றினர். ஏதுவான பந்துகளை அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய இவர்கள் ரன்ரேட்டை 6 ரன்களுக்கு மேலாக நகர்த்தியதுடன் 32-வது ஓவரில் 200 ரன்களையும் தொட வைத்தனர்.

வங்காளதேசம் 330 ரன்

அணியின் ஸ்கோர் 217 ரன்களாக உயர்ந்த போது, ஷகிப் அல்-ஹசன் (75 ரன், 84 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) இம்ரான் தாஹிரின் சுழலில் கிளன் போல்டு ஆனார். ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்தது. உலக கோப்பை போட்டியில் ஒரு விக்கெட்டுக்கு வங்காளதேச ஜோடி எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். முஷ்பிகுர் ரஹிம் தனது பங்குக்கு 78 ரன்கள் (80 பந்து, 8 பவுண்டரி) எடுத்தார். இந்த ஜோடியின் வெளியேற்றத்துக்கு பிறகு ரன்வேகம் சற்று குறைந்தாலும் இறுதி கட்டத்தில் மக்முதுல்லா அதிரடி காட்டி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு வித்திட்டார். கடைசி 4 ஓவர்களில் மட்டும் வங்காளதேச பேட்ஸ்மேன்கள் 54 ரன்கள் விளாசினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. மக்முதுல்லா 46 ரன்களுடன் (33 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். தென்ஆப்பிரிக்க தரப்பில் தனது 100-வது ஒரு நாள் போட்டியில் கால்பதித்த இம்ரான் தாஹிர் மற்றும் பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பிளிஸ்சிஸ் அரைசதம்

பின்னர் உலக கோப்பையில் யாரும் எட்டிராத இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் (23 ரன்) துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆக நேரிட்டது. மற்றொரு தொடக்க வீரர் மார்க்ராம் (45 ரன்), ஷகிப் அல்-ஹசனின் சுழற்பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அணியை தூக்கி நிறுத்த போராடிய கேப்டன் பிளிஸ்சிஸ் 62 ரன்களில் (53 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) பெவிலியன் திரும்பியதும் தென்ஆப்பிரிக்காவுக்கு சிக்கல் உருவானது.

அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு நிலைத்து நின்று விளையாடினாலும் ஆட்டத்தின் போக்கில் உத்வேகம் இல்லை. வங்காளதேசத்தின் ஆக்ரோஷமான பந்து வீச்சும், பீல்டிங்கும் தென்ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்தியது.

50 ஓவர்கள் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்க அணியால் 8 விக்கெட்டுக்கு 309 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. முஸ்தாபிஜூர் ரகுமான் 3 விக்கெட்டுகளும், முகமது சைபுதீன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தென்ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது தோல்வியாகும். ஏற்கனவே அந்த அணி இங்கிலாந்திடம் தோற்று இருந்தது. ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

Next Story