கிரிக்கெட்

ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் இன்று பலப்பரீட்சை: அதிரடி ஜாலம் தொடருமா? + "||" + Action magic continue? Australia-West Indies today is a test

ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் இன்று பலப்பரீட்சை: அதிரடி ஜாலம் தொடருமா?

ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் இன்று பலப்பரீட்சை: அதிரடி ஜாலம் தொடருமா?
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நாட்டிங்காம்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8-வது நாளான இன்று (வியாழக்கிழமை) நாட்டிங்காமில் நடைபெறும் 10-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.


ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் தோற்கடித்தது. அந்த அணியில் பேட்டிங்கில் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், உஸ்மான் கவாஜா, மேக்ஸ்வெல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடியவர்கள்.

வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. முந்தைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. அடுத்தடுத்து அசத்தல் ஆட்டங்களை வெளிப்படுத்திய அந்த அணி புதிய எழுச்சி பெற்றுள்ளது. பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், ரஸ்செல், நிகோலஸ் பூரன் உள்ளிட்டோர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் ஒஷானே தாமஸ், ஜாசன் ஹோல்டர், ரஸ்செல் வலு சேர்க்கிறார்கள்.

இரு அணிகளிலும் அதிரடி பேட்ஸ்மேன்களும், அசுர பந்து வீச்சாளர்களும் இருப்பதால் இந்த ஆட்டத்தில் அதிரடி ஜாலத்துக்கு குறைவு இருக்காது. அதுவும் அதிக ரன் குவிப்புக்கு பெயர் போன ஆடுகளத்தில் இந்த போட்டி அரங்கேறுவதால் ரன் குவிப்புக்கும் பஞ்சம் இருக்காது. நாட்டிங்காமில் இன்று மேக மூட்டமாக இருக்கும் என்றும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடக்க கட்டத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடலாம்.

இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவிக்கையில், ‘வெஸ்ட்இண்டீஸ் மிகவும் அபாயகரமான அணியாகும். இந்த ஆட்டம் நிச்சயம் ஆக்ரோஷம் நிறைந்ததாக இருக்கும். வெஸ்ட்இண்டீஸ் அணியினர் பேட்டிங்கில் அதிரடியாக ஆடுவார்கள். அது தான் அவர்களது பலமும் ஆகும். எனவே அவர்களுக்கு ஆரம்பத்திலேயே நெருக்கடி கொடுக்க முயற்சிப்போம். சரியான பகுதியில் பந்தை பிட்ச் செய்தால் விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும். ஆரம்பத்திலேயே சிறப்பாக செயல்பட வேண்டியது முக்கியமானதாகும்’ என்றார்.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

வெஸ்ட்இண்டீஸ்: கிறிஸ் கெய்ல், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, நிகோலஸ் பூரன், ஹெட்மயர், ஆந்த்ரே ரஸ்செல், ஜாசன் ஹோல்டர் (கேப்டன்), கார்லஸ் பிராத்வெய்ட், ஆஷ்லே நர்ஸ், ஷெல்டன் காட்ரெல், ஒஷானே தாமஸ்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.