ஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க வாரியம் நிராகரித்தது


ஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க வாரியம் நிராகரித்தது
x
தினத்தந்தி 6 Jun 2019 11:48 PM GMT (Updated: 6 Jun 2019 11:48 PM GMT)

ஓய்வு முடிவை கைவிட்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்த அதிரடி வீரர் டிவில்லியர்சின் கோரிக்கையை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நிராகரித்து விட்டது.

ஜோகன்னஸ்பர்க்,

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டிவில்லியர்ஸ், பேட்டிங்கில் அதிரடியாக ஆடக்கூடியவர். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடிப்பதால் அவரை ‘மிஸ்டர் 360 டிகிரி’ என்று அழைப்பது உண்டு. ஒரு நாள் கிரிக்கெட்டில் 31 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தவர். அடிக்கடி காயத்தில் சிக்கிய 35 வயதான டிவில்லியர்ஸ் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பணம் கொழிக்கும் ஐ.பி.எல். போன்ற 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் டிவில்லியர்ஸ் ஓய்வு முடிவை உதறிவிட்டு இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தான் ஆட விரும்புவதாகவும், தன்னையும் அணியில் சேர்த்துக்கொள்ளும்படியும் தென்ஆப்பிரிக்க அணி நிர்வாகத்தை வலியுறுத்திய தகவல் இப்போது கசிந்துள்ளது. கேப்டன் பிளிஸ்சிஸ், பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் ஆகியோரிடமும் இது குறித்து பேசி இருக்கிறார். உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியை தேர்வு செய்வதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக டிவில்லியர்ஸ் விடுத்த இந்த வேண்டுகோளை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முற்றிலும் நிராகரித்து விட்டது.

இது குறித்து தென்ஆப்பிரிக்க தேர்வு குழு தலைவர் லின்டா ஜோன்டி கூறியதாவது:-

ஓய்வு பெற வேண்டாம் என்று நாங்கள் மன்றாடியும் டிவில்லியர்ஸ் கேட்கவில்லை. அவர் நினைத்த போது தென்ஆப்பிரிக்க அணிக்காக ஆடுகிறார் என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது கிளம்பியது உண்டு. அது தவறான தகவல் என்றாலும் அவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நல்ல உடல்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பதற்கு வசதியாக போதுமான கால அவகாசம் வழங்கினேன். உள்ளூரில் நடந்த பாகிஸ்தான், இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் கலந்து கொண்டு விளையாடினால் உலக கோப்பை போட்டிக்கான அணித்தேர்வுக்கு பரிசீலிக்கப்படுவீர்கள் என்று தெளிவாக எடுத்துக் கூறினேன். ஆனால் அவர் இந்த போட்டிகளை புறக்கணித்து விட்டு பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காளதேச பிரிமீயர் லீக் போட்டிகளில் ஒப்பந்தமாகி விளையாடினார். என்னுடைய கோரிக்கையை மறுத்து நிம்மதியாக ஓய்வு பெறுவதாக கூறினார்.

உலக கோப்பை போட்டிக்கான அணியை அறிவிக்க இருந்த நாளன்று, கேப்டன் பிளிஸ்சிஸ், பயிற்சியாளர் கிப்சன் ஆகியோர் டிவில்லியர்ஸ் உலக கோப்பை போட்டியில் விளையாட விரும்பும் தகவலை எங்களிடம் பகிர்ந்தனர். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவரது விலகலால் அணியில் மிகப்பெரிய வெற்றிடம் விழுந்தது. அவரது இடத்திற்கு பொருத்தமான வீரரை தயார் செய்ய ஒரு ஆண்டு பிடித்தது. இந்த காலக்கட்டத்தில் கடினமாக உழைத்த வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இருந்தது. எனவே கொள்கை அளவில் டிவில்லியர்சின் கோரிக்கையை நிராகரித்தோம். அணிக்கும், தேர்வு குழுவுக்கும், கிரிக்கெட் அமைப்புக்கும் நாங்கள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த வீரர் என்பதில் சந்தேகமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நாங்கள் எங்கள் கொள்கைக்கு நேர்மையாக இருக்க வேண்டும். இந்த முடிவில் எங்களுக்கு வருத்தம் இல்லை. இவ்வாறு ஜோன்டி கூறினார்.

இதற்கிடையே தென்ஆப்பிரிக்க அணி உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 தோல்வி அடைந்ததையொட்டி டிவில்லியர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நாம் அனைவரும்(தென்ஆப்பிரிக்க ரசிகர்கள்) தென்ஆப்பிரிக்க அணிக்கு ஆதரவு அளிப்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். இந்த உலக கோப்பையில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி உள்ளது. தென்ஆப்பிரிக்க அணியினர் சரிவில் இருந்து மீள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

Next Story