தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம்: ரோகித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ் கேப்டன் விராட்கோலி புகழாரம்


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம்: ரோகித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ் கேப்டன் விராட்கோலி புகழாரம்
x
தினத்தந்தி 6 Jun 2019 11:55 PM GMT (Updated: 6 Jun 2019 11:55 PM GMT)

இந்திய துணைகேப்டன் ரோகித் சர்மாவின் சிறந்த இன்னிங்ஸ், இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.

சவுதம்டன்,

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. இதில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 228 ரன்கள் இலக்கை இந்திய அணி 47.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. சாதகமற்ற வானிலை, தென்ஆப்பிரிக்காவின் புயல்வேக பந்து வீச்சு இவற்றை திறம்பட சமாளித்த இந்திய துணைகேப்டன் ரோகித் சர்மா 122 ரன்கள் குவித்து ஹீரோவாக ஜொலித்தார். அவருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார். விராட் கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

என்னை பொறுத்தமட்டில், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் இதுவாகும். ஏனெனில் உலக கோப்பை போட்டியில் தொடக்க ஆட்ட நெருக்கடிக்கு மத்தியில் அவர் இந்த சதத்தை அடித்து இருக்கிறார். பந்து அடிக்கடி பவுன்ஸ் ஆகும் போது அதனை சமாளித்து பொறுமையாக ஆடுவது எளிதான காரியம் அல்ல என்பது ஒரு பேட்ஸ்மேனாக எனக்கு தெரியும். தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு பந்து வீசப்பட்டாலும், பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு ரோகித் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு புறத்தில் கடைசி வரை நிலைத்து நின்று ஆட்டத்தின் போக்கை நேர்த்தியாக கட்டுப்படுத்தினார்.

நமது வீரர்களின் சுழற்பந்து வீச்சை அடித்து ஆட முடியாமல் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள் திணறினார்கள். வெற்றி இலக்கு குறைவாக இருந்தாலும், ஆடுகளத்தின் தன்மையால் அதனை எட்டுவது சவாலாக இருந்தது. போட்டியை வெற்றியுடன் தொடங்குவது எப்பொழுதும் முக்கியமானது. தொழில்முறை வீரர்களாக அப்பணியை சரியாக செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு கோலி கூறினார்.

Next Story