உருவத்தை பார்த்து திறமையை எடை போடாதீர்கள் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாசத்


உருவத்தை பார்த்து திறமையை எடை போடாதீர்கள் - ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாசத்
x
தினத்தந்தி 8 Jun 2019 12:17 PM GMT (Updated: 8 Jun 2019 12:17 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்க, கிரிக்கெட் உலகினில் புது பேசுபொருளாக மாறியிருக்கிறார், முகமது ஷாசத்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ஷாசத், தொப்பையுடன், பருமனாக இருப்பதுதான், இதற்கு காரணம். சர்வதேச போட்டி களில் விளையாடும் போதெல்லாம், இவரை பற்றிய விமர்சனங்களும், கேலி-கிண்டல் பேச்சுகளும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இருப்பதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த, இலங்கை-ஆப்கானிஸ்தான் போட்டியிலும் பரவலாக விமர்சிக்கப்பட்டார். குறிப்பாக விக்கெட் கீப்பிங் செய்தபோதும், பந்துகளை பிடிக்காமல் தவறவிட்டபோதும், மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள் அவரது உடல்வாகுவையும், ஆட்டத்திறனையும் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனால் தன்மீதான விமர்சனங்களை சிறிதும் கண்டுகொள்ளாத ஷாசத், போட்டி முடிந்ததும் நிதானமாக பேட்டி கொடுத்தார். அப்போது தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடியும் கொடுத்தார். அதை பார்ப்போம்.

உடல் பருமன், உங்களது ஆட்டத் திறனை குறைக்கிறதா?

2009-ம் ஆண்டு, என்னுடைய உடல் எடை 80 கிலோவாக இருந்தது. இன்று 100-ஐ நெருங்கிவிட்டது. இந்த 10 ஆண்டுகளில் என்னுடைய உடல் எடை கூடி இருந்தாலும் விளையாட்டு திறனும் மேம்பட்டிருக்கிறது. ஏனெனில் எனக்கு இரண்டு விஷயங்கள்தான் மிகவும் பிடிக்கும். ஒன்று, நாள் முழுக்க கிரிக்கெட் விளையாடுவது. மற்றொன்று, சுவையான உணவுகளை ருசிபார்ப்பது. அதனால்தான் உடல் பருமன் விஷயத்தில் கவனம் செலுத்தமுடியாமல், பலரது கேலி-கிண்டல்களுக்கு ஆளாகிறேன்.

குண்டாக இருப்பது பேட்ஸ்மேனுக்கு பெரிய பலவீனமாக இருக்காது. ஆனால் விக்கெட் கீப்பிங் பணிக்கு இடையூறாக இருக்கும் அல்லவா? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் 6 வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடுகிறேன். விக்கெட் கீப்பிங் பணியை 10 வயதில் இருந்து மேற்கொள்கிறேன். அதனால்தான் உடல் எடை அதிகரித்த பிறகும் என்னால், குனிந்து-நிமிர்ந்து, விக்கெட் கீப்பிங் செய்ய முடிகிறது. சிறுவயது பழக்கம், இன்று என்னை காப்பாற்றுகிறது.

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வீரர்களும் ‘யோ-யோ’ எனப்படும் உடற் தகுதி தேர்வில் தோல்வியை தழுவியிருக்கிறார்கள். உங்களுக்கு யோ-யோ போட்டிகள் நடத்தப்படுவது உண்டா? நீங்கள் எப்படி அந்த போட்டியை சமாளிக்கிறீர்கள்?

நான் எந்த அளவிற்கு கிரிக்கெட் விளையாட்டை நேசிக்கிறேனோ, அதே அளவிற்கு ‘யோ-யோ’ போட்டியை வெறுக்கிறேன். ஆப்கானிஸ்தான் அணி வீரர்களுக்கும் ‘யோ-யோ’ தேர்வுகள் நடத்தப்படுவது உண்டு. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் இருக்காது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி நிர்வாகம், வீரர்களின் கிரிக்கெட் திறமையைதான் மதிக்கிறது. அதேசமயம் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க, ‘யோ-யோ’ தேர்வு பயன்படலாம். ஆனால் ஆப்கானிஸ்தான் பொருளாதாரத்திலும், கிரிக்கெட் மோகத்திலும் சற்று பின்தங்கிய நாடு. அதனால் வீரர்கள் தேர்வில் பெரிய குழப்பங்கள் இருக்காது என்பதால், ‘யோ-யோ’ தேர்வுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவது இல்லை.

உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது உண்டா?

உடற்பயிற்சியை விட, கிரிக்கெட் பயிற்சியே ஒரு கிரிக்கெட் வீரருக்கு அதிகம் தேவை என்பது என்னுடைய கருத்து. அதனால் உடற்பயிற்சியில் நான் அதிக கவனம் செலுத்துவதில்லை. ஆனால் வலைப்பயிற்சிகளுக்கும், ஓட்டப்பயிற்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் வழங்குவதுண்டு.

கிரிக்கெட் மைதானத்தில் நீங்கள் விளையாடிக்கொண்டிருக்கும் சமயத்தில், ‘கொஞ்சம் ஒல்லியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்’ என்று என்றாவது சிந்தித்தது உண்டா?

கனடா அணிக்கு எதிராக விளையாடியபோது, நான் வெகுவிரைவாக சதத்தை நெருங்கினேன். அதற்கு பிறகு இரட்டை சதத்தை நோக்கி பயணிக்கையில், உடல் தளர்ந்துவிட்டது. பவுண்டரிகளை அடிப்பதை தவிர, ஓடி ரன் எடுக்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டேன். அன்று இதுபோன்ற சிந்தனை எழுந்தது. அதேசமயம் டி-20 போட்டிகளில் விளையாடும் போதும், அடிக்கடி இந்த சிந்தனை தலைதூக்கும். ஏனெனில் டி-20 போட்டிகளில், சகவீரர்களின் ஓட்டத்திறனுக்கு ஈடுகொடுக்கும் வகையில், தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அந்தசமயத்திலும் உடல் பருமன் ஒரு தடையாக தோன்றும்.

உலககோப்பை போட்டிகளுக்கு என பிரத்யேக பயிற்சி எடுத்தீர்களா?

ஆம்..! இது ஒருநாள் போட்டி தொடர் என்றாலும், டி-20 போட்டிகளை போன்று அதிரடியாக விளையாட பயிற்சி எடுத்திருக்கிறேன். சுருக்கமாக சொல்லவேண்டுமானால், ஒன்று-இரண்டு-மூன்று என ரன்களை ஓடி எடுப்பதை விட, பவுண்டரிகளையும், சிக்சர்களையும் குவிப்பதே என்னுடைய இலக்கு.

ரசிகர்களின் விமர்சனம் உங்களை பாதிப்பது உண்டா?

நிச்சயமாக பாதிக்கும். ஆனால் என் மீது தவறு இருக்கும் பட்சத்தில், விமர்சனங்களை நான் உள்வாங்கி கொள்வேன். தவறு இல்லாதபட்சத்தில், பதிலளிப்பேன்.

ஆப்கானிஸ்தான் அணிக்கும், இந்திய அணிக்கும் உள்ள தொடர்பு என்ன?

இந்திய கிரிக்கெட் அணிதான், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் குரு எனலாம். போட்டி களத்தில் மல்லுகட்டினாலும், பயிற்சி களத்தில் பல விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவின் சில இடங்களில் எங்களுக்கு பயிற்சி மைதானங்களை கட்டிக்கொடுத்திருக்கிறார்கள். அங்குதான் நாங்கள் கிரிக்கெட் பயிற்சி பெற்றோம். பெறுகிறோம். இனியும் பெறுவோம்.

டோனி உங்களது ரோல்மாடல் என பல பேட்டிகளில் கூறியிருக்கிறீர்கள். அவரை சந்தித்து பேசிய அனுபவத்தை கூறுங்கள்?

ஒருமுறை ஓட்டல் அறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னை அன்போடு வரவேற்று, தேநீர் தயாரித்து கொடுத்தார். டோனியை சந்தித்து, அவரோடு பேசுகிறோம் என்ற மகிழ்ச்சியை விட, டோனியை வேலை வாங்கிவிட்டோமே என்ற வருத்தம்தான் அதிகமாக இருந்தது. அதை டோனியிடம் வெளிப்படுத்தினேன். அவர், “அப்படியானால் இனி சந்திக்க வரவேண்டாம். ஏனெனில் நான் வருபவர்களுக்கு தேநீர் தயாரித்து கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன். உங்களுக்கு அது மன கஷ்டத்தை உண்டாக்கினால் இனி வரவேண்டாம்” என்றபடி சிரித்தார்.

கிரிக்கெட் ஜாம்பவான்கள், உங்களது உடல்பருமன் பற்றி கருத்து தெரிவித்தது பற்றி?

எவரும் என்னை புண்படுத்தியது இல்லை. ஆனால் என்னை பல கிரிக்கெட் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டு கேலி செய்தது உண்டு. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, உடற்பயிற்சியை கடுமையாக கடைப்பிடிக்க கூடியவர். அவரை போன்று என்னையும் உடற்பயிற்சி மேற்கொள்ள, பல கிரிக்கெட் வீரர்களும் வலியுறுத்தினர். ஆனால் நான் அதை ஏற்கவில்லை. ஏனெனில் என்னால் விராட் கோலி போன்று சிக்சர் அடிக்க முடிகிறது. அதை பல சர்வதேச போட்டிகளில் நிரூபித்திருக்கிறேன். ஒரு டி-20 போட்டியில் 16 பந்துகளில் 74 ரன்களை திரட்டி, அதிரடி காட்டமுடியும் என்பதையும் நிரூபித்திருக்கிறேன். இதற்கு மேல், என்னுடைய திறமையை எப்படி நிரூபிப்பது என்பது தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன். அநேகமாக, இந்த உலககோப்பை போட்டிகளில் என்னை பற்றிய விமர்சனங்களுக்கு, நிச்சயம் பதிலடி கொடுப்பேன்.

உங்களை விமர்சிப்பவர்களுக்கு நீங்கள் கூற நினைப்பது என்ன?

ஒருவரது உருவத்தை வைத்து எடை போடும் பழக்கத்தை என்னோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ஏனெனில் இது எனக்கு பழகிவிட்டது. ஆனால் என்னைப்போல பலராலும் இதை தாங்கிக்கொள்ளமுடியாது. என் உடல் பருமனுக்குள் ஒளிந்திருக்கும் துயரங்களை நீங்கள் அறிந்திருக்க முடியாது. ஏனெனில் அமைதியான நாட்டில் பிறந்து, அந்நாட்டு குடிமகனாக வளர்ந்து, முறையான பயிற்சி மைதானத்தில் பயிற்சி பெற்று, கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கும், எனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. ஏனெனில் நான் அகதியாக பிறந்து, வளர்ந்து இன்று கிரிக்கெட் வீரராக உருமாறியிருக்கிறேன். அதனால் என்னை பாராட்டவும் வேண்டாம், பழிபேசவும் வேண்டாம். அமைதியாக விளையாடவிட்டாலே, அது எனக்கு போதுமானதாக இருக்கும்.

முகமது ஷாசத் பற்றி...

இவர் பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில், அகதிகள் முகாமில் பிறந்தவர். அங்குதான் வளர்ந்தார். அகதிகள் முகாமில் பொழுதுபோக்குகள் குறைவு என்பதால், நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடி, கிரிக்கெட் திறனை வளர்த்து கொண்டார். இன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருக்கும் பெரும்பாலான வீரர்கள், அகதி முகாமில் கிரிக்கெட் பயின்றவர்களே. பாகிஸ்தானின் பெஷாவர் நகரம் கொழுப்பு இறைச்சி உணவுகளுக்கு பிரபலமானது. அங்கு வளர்ந்ததால், இவரும் கொழுப்பு இறைச்சி உணவுகளுக்கு அடிமையாகிபோனார். அதுவும் இவரது உடல் பருமனுக்கு ஒரு காரணம். இன்று பலரது விமர்சனங்களுக்கு ஆளாகியிருக்கும் ஷாசத், கிரிக்கெட் போட்டியில் பல சதங்களை விளாசியிருக்கிறார். அதேசமயம், விக்கெட் கீப்பராக நின்று பல கேட்சுகளையும் பிடித்திருக்கிறார். ஸ்டம்பிங்களும் செய்திருக்கிறார்.

Next Story