ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா? - இன்று பலப்பரீட்சை


ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்குமா இந்தியா? - இன்று பலப்பரீட்சை
x
தினத்தந்தி 8 Jun 2019 11:56 PM GMT (Updated: 8 Jun 2019 11:56 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

லண்டன்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, முன்னாள் சாம்பியனான இந்திய அணியை எதிர்கொள்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீசையும் வீழ்த்தி வலுவான நிலையில் உள்ளது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலியா அசத்தியது.

கடந்த ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய பிறகு தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, கடந்த சில மாதங்களாக ஒருங்கிணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித் அணிக்கு திரும்பி இருப்பது 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை மேலும் பலப்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி தனது கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக பீடு நடை போடுகிறது.

வேகப்பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் எந்த அணிக்கும் சவால் அளிக்கும் வகையில் வலுவாக விளங்கும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் திறனை நிச்சயம் பரிசோதிக்கும். கடந்த மார்ச் மாதம் நடந்த இந்திய பயணத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு நாள் போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் தனதாக்கியது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் மணிக்கட்டை அதிகம் பயன்படுத்தி பந்து வீசும் யுஸ்வேந்திர சாஹல், குல்தீல் யாதவ் ஆகியோரின் மாயாஜால பந்து வீச்சை திறம்பட சமாளித்தனர். அந்த வெற்றி தங்களது நம்பிக்கையை அதிகப்படுத்தி இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 122 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோர் நன்றாக செயல்பட்டனர்.

ஆஸ்திரேலிய அணியினர் ‘ஷாட் பிட்ச்’ பந்து வீச்சு மூலம் இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்த முயற்சிப்பார்கள். மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் உள்ளிட்டோரின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சை நமது வீரர்கள் எந்த அளவுக்கு சிறப்பாக கையாளுகிறார்களோ? அதற்கு தகுந்தபடியே ஆட்டத்தின் போக்கு அமையும். இரு அணிகளும் தங்களது வெற்றிப்பயணத்தை தொடர மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

வானிலையை பொறுத்தவரை இங்கு பிற்பகலில் லேசாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மற்றபடி வெயில் அடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த போட்டி தொடரில் ஓவல் மைதானத்தில் சேசிங் செய்வது கடினமானதாக இருந்து வருகிறது. எனவே இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா.

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், டோனி, ஹர்திக் பாண்ட்யா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

வலைப்பயிற்சியில் பவுலர் தலையை பதம் பார்த்த பந்து

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டேவிட் வார்னர் அடித்த ஒரு பந்து வலைப்பயிற்சி பந்து வீச்சாளர் ஜெய்கிஷான் தலையில் தாக்கியது. இதனால் அந்த பவுலர் நிலைகுலைந்து மைதானத்தில் சரிந்தார். 15 நிமிடங்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சிக்கு உள்ளான டேவிட் வார்னர் சிறிது நேரம் பயிற்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். அடிபட்ட வீரருக்கு பயப்படும் வகையில் காயம் எதுவும் இல்லை என்று அறிந்த பிறகே வார்னர் நிம்மதி பெருமூச்சு விட்டார். பின்னர் அவர் வலைப்பயிற்சியில் மீண்டும் ஈடுபட்டார்.


Next Story