கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அணி 2-வது வெற்றி + "||" + World Cup Cricket: India won by 36 runs

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அணி 2-வது வெற்றி

ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து இந்திய அணி 2-வது வெற்றி
உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.
லண்டன்,

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இந்த நிலையில் லண்டன் ஓவலில் நேற்று நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன் கோதாவில் இறங்கியது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.


‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி ஷிகர் தவானும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். களத்தில் காலூன்றி தங்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக இருவரும் அவசரம் காட்டாமல் நிதானத்தை கடைப்பிடித்தனர். முதல் 7 ஓவர்களில் இந்தியா 22 ரன்களே எடுத்தது. அதன் பிறகு நாதன் கவுல்டர்-நிலேயின் ஓவரில் ஷிகர் தவான் 3 பவுண்டரியை விரட்டியடித்து ரன்வேட்டையை ஆரம்பித்து வைத்தார். ஏதுவான பந்துகளை அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்ட இவர்கள் 19-வது ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த முதல் இந்திய ஜோடி என்ற மகிமையை பெற்ற இவர்கள் அணியின் ஸ்கோர் 127 ரன்களாக (22.3 ஓவர்) உயர்ந்த போது பிரிந்தனர். ரோகித் சர்மா 57 ரன்னில் (70 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் விராட் கோலி ஆட வந்தார். மறுமுனையில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திய ஷிகர் தவான் 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அணி மிரட்டலான ஸ்கோரை நோக்கி பயணிக்க வித்திட்ட ஷிகர் தவான் தனது பங்குக்கு 117 ரன்கள் (109 பந்து, 16 பவுண்டரி) விளாசிய நிலையில், மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா களம் புகுந்தார். சந்தித்த முதல் பந்திலேயே பாண்ட்யா வெளியேறி இருக்க வேண்டியது. கொடுத்த எளிதான கேட்ச் வாய்ப்பை விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா, ஆஸ்திரேலிய பவுலர்கள் மேக்ஸ்வெல், ஜம்பா, கம்மின்ஸ் உள்ளிட்டோரின் பந்து வீச்சில் சிக்சர் அடித்து ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.

இதற்கு மத்தியில் விராட் கோலி 50-வது அரைசதத்தை எட்டினார். 45.4 ஓவர்களில் இந்தியா 300 ரன்களை தாண்டியது. இதற்கு அடுத்த பந்தில் ஹர்திக் பாண்ட்யா 48 ரன்களில் (27 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) கேட்ச் ஆனார்.

அவருக்கு பிறகு மூத்த வீரர் டோனி இறங்கினார். டோனியும் சில அபாரமான ஷாட்டுகளை தெறிக்கவிட்டு, மேலும் வலுவூட்டினார். டோனியும் (27 ரன், 14 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), விராட் கோலியும் (82 ரன், 77 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் மட்டும் நமது வீரர்கள் 116 ரன்கள் சேகரித்து மலைக்க வைத்தனர். ஆடுகளம் பேட்டிங்குக்கு ஓரளவு கைகொடுத்தாலும் ஆஸ்திரேலியாவின் பீல்டிங் வியப்புக்குரிய வகையில் இருந்தது. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் அதிகரித்து இருக்கும்.

அடுத்து களம் கண்ட ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். முதல் 9 ஓவர்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தனர். அதிரடியை தொடங்கிய சமயத்தில்ஆரோன் பிஞ்ச் (36 ரன்) ரன்-அவுட் ஆனார். அதன் பிறகு சீரான இடைவெளியில் அந்த அணிக்கு விக்கெட்டுகள் விழுந்தன. வார்னர் 56 ரன்னிலும் (84 பந்து, 5 பவுண்டரி), ஸ்டீவன் சுமித் 69 ரன்னிலும் (70 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினர். ரன்தேவை அதிகரித்து கொண்டே போனதால் ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி அதிகரித்தது. ஒரு கட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் போல் தோன்றிய போது, விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இந்திய பவுலர்களுக்கு ‘தண்ணி’ காட்டியதால் வெற்றி தாமதம் ஆனது. 50 ஓவர் முழுமையாக ஆடிய ஆஸ்திரேலியா 316 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அலெக்ஸ் கேரி 55 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது. அவர்களின் வீறுநடைக்கு இந்தியா இப்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்த இந்தியாவுக்கு இது 2-வது வெற்றியாகும். ஆஸ்திரேலியாவுக்கு முதல் தோல்வியாகும். ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்திய ரசிகர்களால் நிரம்பிய மைதானம்

25 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட லண்டன் ஓவல் மைதானம் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இந்திய ரசிகர்களே அதிக அளவில் வந்திருந்தனர். எங்கும் இந்திய சீருடைக்குரிய ஊதா நிறமே காட்சி அளித்தது. ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்ப்பதே அரிதாக தெரிந்தது. இதை குறிப்பிட்டு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘33 ஆஸ்திரேலிய ஆதரவாளர்களை மட்டுமே மைதானத்தில் பார்த்தேன். இதில் ஆஸ்திரேலிய அணியினர், உதவியாளர்களும் அடங்குவர்’ என்று கிண்டலாக பதிவிட்டார்.

உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர்

இந்த ஆட்டத்தில் இந்தியா குவித்த 352 ரன்களே உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு அணியின் ‘மெகா’ ஸ்கோராகும். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு சிட்னியில் நடந்த ஆட்டத்தில் இலங்கை 312 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. இவ்விரு அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களை தொட்டதில்லை.

வார்னருக்கு அதிர்ஷ்டம்

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலேயே நடையை கட்டியிருக்க வேண்டியது. பும்ராவின் ஓவரில், பந்து ஸ்டம்பை தட்டிய போது, ஸ்டம்பு மீது இருந்த பெய்ல்ஸ் அசையவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக தப்பிய வார்னர் அரைசதம் அடித்தார். இந்த உலக கோப்பையில் பந்து ஸ்டம்பு மீது தாக்கியும் பெய்ல்ஸ் கீழே விழாதது இது 5-வது முறையாகும்.


தொடர்புடைய செய்திகள்

1. உலக கோப்பை கிரிக்கெட்டில் வென்ற விதம் நியாயமற்றது - மோர்கன்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற விதம் நியாயமற்றது என இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.
2. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடிய இந்திய வீரருக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
3. உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள்: 3-வது வரிசை பேட்ஸ்மேன்களும் அசத்தல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தியதும், சுழற்பந்து வீச்சாளர்கள் சோடை போனதும் புள்ளி விவரங்களுடன் வெளியாகியுள்ளது.
4. உலக கோப்பை வெற்றி; பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறுவாரா?
உலக கோப்பை கிரிக்கெட் கோப்பையை முதன்முறையாக இங்கிலாந்து வென்ற நிலையில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீரத்திருமகன் அந்தஸ்து பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
5. உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம்..! சுப்பிரமணியன் சுவாமி திடுக்!
உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியாவின் தோல்விக்கு என்ன காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறி உள்ளார்.