கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி சிறப்பானது - கேப்டன் விராட்கோலி மகிழ்ச்சி + "||" + The victory against Australia is great - Captain Virat kohli happy

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி சிறப்பானது - கேப்டன் விராட்கோலி மகிழ்ச்சி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி சிறப்பானது - கேப்டன் விராட்கோலி மகிழ்ச்சி
உலக கோப்பை போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பெற்ற வெற்றி சிறப்பானது என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 316 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை சந்தித்தது. 117 ரன்கள் எடுத்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார்.


வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில், ‘நாங்கள் கடைசியாக நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரை இழந்தோம். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக எங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இதனால் கூடுதல் உத்வேகத்துடன் களம் கண்டோம். இது ஒரு சிறப்பான வெற்றியாகும். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அருமையாக செயல்பட்டார்கள். நாங்கள் தொழில்முறை ஆட்ட நேர்த்தியுடன் செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது வீரர்கள் துல்லியமாக பந்து வீசி அடித்து ஆட முடியாத அளவுக்கு எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். நமது வீரர்கள் அனுபவம் மிக்கவர்கள். அவர்களுக்கு எதுவும் சொல்ல வேண்டியதில்லை. பந்து ஸ்விங் ஆகும் சூழ்நிலை இருந்தால் தான் முகமது ஷமியை களம் இறக்க முடியும். புவனேஷ்வர்குமார் புதிய பந்தில் மட்டுமின்றி பழைய பந்திலும் நன்றாக பந்து வீசுவார். புவனேஷ்வர்குமார் ஒரே ஓவரில் ஸ்டீவன் சுமித், மார்கஸ் ஸ்டோனிஸ் விக்கெட்டை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது’ என்று தெரிவித்தார்.

தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் கருத்து தெரிவிக்கையில், ‘இந்திய அணி கடைசி 10 ஓவர்களில் 120 ரன்கள் எடுத்தது. இது மிகவும் அதிகமாகும். நாங்கள் போதிய விக்கெட் வீழ்த்தாததால் ஆட்டம் கடினமானதாக இருந்தது. புதிய பந்து வீச்சு எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவானதாகும். அவர்கள் எங்களை முழுமையாக வீழ்த்தி விட்டார்கள். இந்திய அணியின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. இதனால் தான் டேவிட் வார்னரால் அதிரடியாக விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆடம் ஜம்பா பந்தை சேதப்படுத்தவில்லை. அவர் தனது பாக்கெட்டில் கையை வெதுவெதுப்பாக வைத்து இருக்க உதவும் உபகரணத்தை எப்பொழுதும் வைத்து இருப்பார். அதனை தான் எல்லா போட்டிகளிலும் பயன்படுத்துவார். நடந்த சம்பவத்தை நான் பார்க்கவில்லை. எனவே அது குறித்து அதிகம் விவாதிக்க விரும்பவில்லை’ என்றார்.