கிரிக்கெட்

உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் - ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு + "||" + I don't know why I was ruled unfit when I was fit to play - Shahzad Accusation

உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் - ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு

உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து நீக்கி விட்டனர் - ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றச்சாட்டு
உடல் தகுதியுடன் இருந்தும் சதி செய்து தன்னை நீக்கி விட்டதாக, ஆப்கானிஸ்தான் வீரர் ஷாசத் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பிடித்து இருந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான முகமது ஷாசத், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டங்களில் ஆடினார். நியூசிலாந்துக்கு எதிராக கடந்த 8-ந் தேதி நடந்த லீக் ஆட்டத்திற்கு முன்பாக உடல் தகுதியுடன் இல்லை என்று அவர் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். இடது முழங்காலில் காயம் அடைந்துள்ள அவர் எஞ்சிய போட்டி தொடரில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் முகமது ஷாசத், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீது புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘விளையாடும் அளவுக்கு நான் உடல் தகுதியுடன் தான் இருக்கிறேன். ஆனால் உடல் தகுதியுடன் இல்லை என்று அறிவித்தது ஏன்? என்பது இன்னும் எனக்கு புரியவில்லை. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் உள்ள சிலர் எனக்கு எதிராக சதிவேலையில் ஈடுபட்டுள்ளனர். அணியின் மானேஜர், டாக்டர், கேப்டன் ஆகியோருக்கு மட்டுமே எனக்கு பதிலாக இன்னொருவர் பெயர் அறிவிக்கப்படுவது தெரியும். பயிற்சியாளர் பில் சிமோன்ஸ்க்கு கூட பிறகு தான் தெரியும். என் இதயம் சுக்குநூறாகி விட்டது. நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்காக பயிற்சியில் ஈடுபட்டு முடிந்த பிறகு செல்போனை பார்த்த பிறகு தான் முழங்கால் காயம் காரணமாக உலக கோப்பை போட்டியில் இருந்து நான் விலகி விட்டதாக வெளியான செய்தியை பார்த்தேன். அணி வீரர்கள் யாருக்கும் தெரியாது. சக வீரர்கள் இந்த செய்தியால் அதிர்ச்சி அடைந்தனர்’ என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செய்தி அதிகாரி அசத்துல்லா கானிடம் கருத்து கேட்ட போது, ‘முகமது ஷாசத் சொல்வது முற்றிலும் தவறானது. அவரது மருத்துவ அறிக்கை ஐ.சி.சி.யிடம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டார். உடல் தகுதி இல்லாத வீரரை ஆடவைக்க முடியாது. இனிமேல் உலக கோப்பை போட்டியில் விளையாட முடியாதே என்ற விரக்தியில் அவர் பேசுவதாக நினைக்கிறேன். உடல் தகுதி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது’ என்று தெரிவித்தார்.