ஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு


ஆடுகளத்தன்மையில் பாகுபாடு: ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Jun 2019 10:42 PM GMT (Updated: 14 Jun 2019 10:42 PM GMT)

ஆடுகளத்தன்மையில் பாகுபாடு காட்டுவதாக, ஐ.சி.சி. மீது இலங்கை கிரிக்கெட் அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது.

லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் 2 ஆட்டங்கள் (பிரிஸ்டல் மைதானம்) மழையால் கைவிடப்பட்டது. அதிக புற்கள் நிறைந்த கார்டிப்பில் நடந்த மற்ற இரு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றியும், மற்றொன்றில் தோல்வியும் அடைந்தது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஆடுகளத்தன்மையில் பாகுபாடு காட்டுவதாக இலங்கை அணி நிர்வாகம் திடீரென புகார் கூறியுள்ளது. இது குறித்து அந்த அணியின் மேலாளர் அஷாந்த டி மெல் கூறியதாவது:-

நாங்கள் இதுவரை கார்டிப் மற்றும் பிரிஸ்டலில் 4 ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். 4 ஆட்டங்களுக்குரிய ஆடுகளங்களிலும் பந்து வீச்சுக்கு உகந்த வகையில் புற்கள் அதிகமாக இருந்தது. இதே மைதானத்தில் மற்ற அணிகள் ஆடும் போது ஆடுகளத்தன்மை மாறி பிரவுன் நிறத்தில் காட்சி அளிக்கிறது. அவை ரன் குவிப்புக்கு ஏற்றதாக இருந்தன. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவலில் (இன்று நடக்கிறது) மோத உள்ள ஆடுகளத்திலும் புற்கள் நிறைந்துள்ளது. இதை நாங்கள் புகாராக சொல்ல விரும்பவில்லை. ஆனால் குறிப்பிட்ட அணிக்கு ஒரு மாதிரியாகவும், மற்ற அணிகளுக்கு வேறு மாதிரியாகவும் ஆடுகளத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்குவது நிச்சயம் நியாயமற்றது. இதே போல் பயிற்சி வசதிகளும் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. கார்டிப்பில் 3 வலை பயிற்சி இடம் இருந்தும் 2-ஐ மட்டுமே ஒதுக்கினார்கள். பிரிஸ்டலில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் நீச்சல் குளம் இல்லை. இவை எல்லாம் ஒவ்வொரு அணிக்கும் அவசியமானதாகும். ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியை முடித்து விட்டு நீச்சல் குளத்தில் தங்களை ரிலாக்ஸ் செய்து கொள்வது வழக்கம். அதே சமயம் பாகிஸ்தான், வங்காளதேச அணியினர் பிரிஸ்டலில் தங்கியிருந்த ஓட்டலில் நீச்சல் குளம் வசதி இருந்தது. இது போன்ற குறைபாடுகளை சரிசெய்து தரும்படி 4 நாட்களுக்கு முன்பு ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story