ஹாக்கி

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + World hockey series: progress to the Indian team final

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

உலக ஆக்கி தொடர்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
உலக ஆக்கி தொடர் இறுதி சுற்றின் அரைஇறுதியில் இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
புவனேசுவரம்,

2-வது உலக ஆக்கி தொடர் இறுதி சுற்று போட்டி ஒடிசா தலைநகர் புவனேசுவரத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தென்ஆப்பிரிக்க அணியில் ஆஸ்டின் சுமித் 42-வது நிமிடத்திலும், நிகோலஸ் 60-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். அமெரிக்க அணியில் காப்பெலெர் அகி 15-வது நிமிடத்தில் கோல் போட்டார்.


மற்றொரு அரைஇறுதியில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஆசிய விளையாட்டு சாம்பியனான ஜப்பானை எதிர்கொண்டது. இதில் ஜப்பான் அணி முதலில் கோல் அடித்தது. ஆனால் இந்த முன்னிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பின்னர் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 7-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணியில் ரமன்தீப் சிங் 2 கோலும் (23 மற்றும் 37-வது நிமிடம்), தனது 100-வது ஆட்டத்தில் ஆடிய ஹர்மன்பிரீத் சிங் (7-வது நிமிடம்), வருண்குமார் (14-வது நிமிடம்), ஹர்திக் சிங் (25-வது நிமிடம்), குர்சாகிப்ஜித் சிங் (43-வது நிமிடம்), விவேக் பிரசாத் (47-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.

முன்னதாக நடந்த 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் ரஷியா அணி 3-2 என்ற கோல் கணக்கில் போலந்தை சாய்த்து 5-வது இடத்தை தனதாக்கியது. போலாந்து அணி 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன. முன்னதாக மாலை 5 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அமெரிக்கா-ஜப்பான் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியில் முதல் 2 இடங்களுக்குள் வந்ததன் மூலம் இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்று போட்டிக்கு தேர்வாகி விட்டன.