கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இலங்கையுடன் இன்று மோதல் + "||" + World Cup Cricket: Will Australia continue to dominate? - Today's clash with Sri Lanka

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இலங்கையுடன் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா? - இலங்கையுடன் இன்று மோதல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
லண்டன்,

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 17-வது நாளான இன்று (சனிக்கிழமை) லண்டன் ஓவலில் நடைபெறும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, முன்னாள் சாம்பியனான இலங்கையை சந்திக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.


ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தியது. தனது 3-வது லீக் ஆட்டத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக உள்ளது. பேட்டிங்கில் டேவிட் வார்னர், கேப்டன் ஆரோன் பிஞ்ச், ஸ்டீவன் சுமித் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். டேவிட் வார்னர் பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் சதம் விளாசி கலக்கினார். பந்து வீச்சில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் கவுல்டர்-நிலே ஆகியோர் சவாலாக திகழ்கிறார்கள். அந்த அணிக்கு சுழற்பந்து வீச்சு தான் இன்னும் எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் களம் இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அடுத்த ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இலங்கை அணி பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் தடுமாறி தான் வருகிறது. இலங்கை அணி எல்லா துறைகளிலும் எழுச்சி பெற்றால் தான் ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்துக்கு அணை போட முடியும்.

இந்த போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ் அல்லது நாதன் லயன், உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, நாதன் கவுல்டர் நிலே, கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன்.

இலங்கை: கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, திரிமன்னே, குசல் மென்டிஸ், மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, திசரா பெரேரா, இசுரு உதனா, சுரங்கா லக்மல், மலிங்கா, நுவான் பிரதீப் அல்லது ஜெப்ரே வாண்டர்சே.

மற்றொரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதல்

கார்டிப்பில் மாலை 6 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் ஆட்டத்தில் வெற்றி கணக்கை தொடங்காத ஆப்கானிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்தது. பாப் டுபிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதல் 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி கண்டது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி ஒரு புள்ளியை பெற்றது. தென் ஆப்பிரிக்க அணியில் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் இருந்தாலும் அவர்கள் உத்வேகம் இல்லாத ஒரு அணியாகவே விளங்கி வருகிறார்கள். ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித் கான், முகமது நபி ஆகியோர் நிச்சயம் தென்ஆப்பிரிக்க அணிக்கு குடைச்சல் கொடுப்பார்கள். இந்த ஆட்டத்தில் தோல்வி கண்டால் தென்ஆப்பிரிக்க அணியின் அரை இறுதி வாய்ப்பு மங்கி விடும். இதனால் அந்த அணிக்கு இது வாழ்வா-சாவா? ஆட்டமாகும். முதல் வெற்றியை பெற இரு அணிகளும் போராடும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் சந்தித்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.