கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா? -வானிலை எப்படி? + "||" + Will India-Pakistan Rivalry Affect Rainfall? How's the weather?

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா? -வானிலை எப்படி?

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா? -வானிலை எப்படி?
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமும் மழையால் பாதிக்கப்படுமா? பாதிக்கப்பட்டால் கோடிகணக்கில் நஷ்டம் ஏற்படும்.
மான்செஸ்டர் :

உலகக்கோப்பை  போட்டி தொடரில் பரபரப்பான சூழலில் இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி நாளை  நடைபெற உள்ளது. ஏற்கனவே 4  போட்டிகள் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது மழை வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உலகக்கோப்பை தொடர் தொடங்கியது முதல் 15 நாட்களில் 18 போட்டிகள் நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால் 14 போட்டிகள் மட்டுமே நடந்துள்ளது.  மீதமுள்ள நான்கு போட்டிகள் மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதாவது, கிட்டத்தட்ட ஒவ்வொரு நான்கு போட்டிக்கும் இடையே மழையின் குறுக்கீடு இருந்துள்ளது. இதுவரை மூன்று போட்டிகளில் ஒரு பந்து கூட வீசப்பட வில்லை. ஒரு போட்டி ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் எந்தவித முடிவும் எட்டப்படாமல் ஆட்டம் தடை செய்யப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்தில் பெய்து வரும் மழை தான். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் 50 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

உலகக்கோப்பை தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு அந்த அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கொடுக்கப்பட்டது. அந்த நான்கில் ஒரு போட்டி இந்தியா - நியூசிலாந்து போட்டி ஆகும்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி மான்செஸ்டரில் நடக்க உள்ளது. எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல பாகிஸ்தானும் எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. ஆனால் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 முறை இந்தியா-பாகிஸ்தான் மோதியுள்ளன. ஆறிலும் இந்தியாவே வென்றுள்ளது. பாகிஸ்தான் ஒருமுறையும் வெற்றி பெற முடியவில்லை.ஒருவேளை இந்தியா பாகிஸ்தான்  போட்டியின் போது மழை குறுக்கிட்டால், பலத்த நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

வானிலை ஆய்வு மையம் கருத்துப்படி, ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இந்தியா-பாகிஸ்தான் போட்டி கூட மழையின் காரணமாக பாதிக்கப்படலாம். அன்று பெரும்பாலும் மான்செஸ்டரில் மேகமூட்டமான வானிலை இருக்கும். இடைஇடையே மழை பெய்யலாம். மதியத்திற்கு பிறகு கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.உலகக்கோப்பை தொடரை இந்தியாவில் ஒளிபரப்பி வரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு, இந்த நான்கு போட்டிகளில் மட்டும் 100 கோடி ரூபாய் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து போட்டியில் மட்டும் சுமார் 75 கோடி நஷ்டம்.

இந்த சூழ்நிலையில் தான் மழைக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு தான் மார்க்கெட் மதிப்பு அதிகம் என்பதால், இந்தப் போட்டியில் மட்டும் 137 கோடி வருமானம் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்தியா ஆடும் போட்டிகளுக்கு (பாகிஸ்தான் போட்டி தவிர்த்து), 65 முதல் 75 கோடி வரை வருவாய் கிடைக்கும். இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு விளம்பர வருவாய் மட்டும் 138 கோடிக்கும் மேல் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஒருவேளை இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் கைவிடப்பட்டால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு உலகக்கோப்பை தொடரில் மொத்தமாக 230 கோடிக்கும் மேல் நஷ்டம் ஆகும். இது ஒட்டு மொத்த வருமானத்தில் பெரிய பாதிப்பாக இருக்கும்.

2019 உலகக்கோப்பை தொடரின் மூலம் 1250 முதல் 1350 கோடி வரை வருமானம் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதில் 230 கோடி நஷ்டம் என்பது சுமார் 20 சதவீத நஷ்டம் ஆகும். இதனால், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்படும்.