கிரிக்கெட்

சச்சின் தெண்டுல்கருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்ட ஐசிசி - வைரலாகிய வீடியோ + "||" + Watch: Rohit Sharma recreates Sachin Tendulkar's iconic uppercut against Shoaib Akhtar in IND vs PAK WC clash

சச்சின் தெண்டுல்கருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்ட ஐசிசி - வைரலாகிய வீடியோ

சச்சின் தெண்டுல்கருடன்  ரோகித் சர்மாவை  ஒப்பிட்ட ஐசிசி - வைரலாகிய  வீடியோ
சச்சின் தெண்டுல்கருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்டு ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது. அது வைரலாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப்பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார். 122 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் ரோகித் சர்மா சதம் அடித்தார். 140 ரன்கள் குவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

கடந்த உலக கோப்பையில் டோனி பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சூரி அடித்து இருந்தார். 209-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோகித் சர்மாவுக்கு இது 24- வது சதமாகும். ரோகித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் 85 பந்தில் சதம் அடித்தார். இது அவரது 3-வது அதிவேக சதமாகும்.

கடந்த ஆண்டு அவர் இங்கிலாந்துகக்கு எதிராக 82 பந்தில் சதம்  அடித்ததே அதிவேகமாக இருக்கிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 84 பந்தில் சதம் அடித்து இருந்தார். இங்கிலாந்து மைதானத்தில் ரோகித்தின் 4-வது சதமாகும். இதன் மூலம் அவர் தவான், ரிச்சார்சுடன் இணைந்தார்.

ரோகித் சர்மா நேற்று 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் உள்ளார். அவர் டோனியை முந்தினார்.

ரோகித் சர்மா 358 சிக்சருடன் முதல் இடத்திலும், டோனி 355 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், தெண்டுல்கர் 264 சிக்சர்களுடன் 3-வதுஇடத்திலும், யுவராஜ்சிங் 251 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கங்குலி 247 சிக்சருடன் 5-வது இடத்திலும், ஷேவாக் 243 சிக்சருடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா அடித்த ஷாட் ஒன்றை, 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போது சச்சின் அடித்த ஷாட்டுடன் ஒப்பிட்டு ஐசிசி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. ஐசிசி ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

2003-ம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி தென்ஆப்பிரிக்காவில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போட்டி நடைபெற்றது. இந்த தொடரில் சச்சின் தெண்டுல்கரின் 98 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி 50 ஓவர் முடிவில் 273 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான அன்வர் 101 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 274 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சேவாக் மற்றும் டெண்டுல்கர் களமிறங்கினர். இந்த ஆட்டத்தில் சிறப்பான தொடக்கத்தை தந்த சச்சின் 2 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸருடன் சதம் அடிக்காமல் 75 பந்துகளில் 98 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து இந்திய அணி 45.4 ஓவரில் 276 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த தொடரில் சச்சின் அடித்த ஷாட்டுடன் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோகித் அடித்த ஷாட் ஒன்றை ஒப்பிட்டு ஐசிசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் யார் சிறப்பாக ஷாட் அடித்துள்ளனர் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் ரசிகர்கள் பெரும்பாலானோர் சச்சினையே முன்மொழிந்துள்ளனர்.