கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி + "||" + In the game against Pakistan, Playing without a crisis led to success - Indian team captain Virat Kohli

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி
பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
மான்செஸ்டர்,

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் மான்செஸ்டரில் நேற்று முன்தினம் மழை பாதிப்புக்கு மத்தியில் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. அத்துடன் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி கண்டதில்லை என்ற பெருமையையும் தக்க வைத்தது.


முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனை அடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. 140 ரன்கள் குவித்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்திய அணியின் இந்த வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.

வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிட்ச்சில் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. முதல் இன்னிங்சின் பிற்பாதியில் பந்து சுழல ஆரம்பித்தது. நாங்கள் முதலில் பந்து வீச தான் விரும்பினோம். துல்லியமாக பந்து வீசினால் பலன் கிடைக்கும். ரோகித் சர்மா மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லோகேஷ் ராகுல், ரோகித் சர்மாவுக்கு பக்கபலமாக விளங்கினார். அணியின் கூட்டு முயற்சியால் 336 ரன்கள் எடுத்தோம். குல்தீப் யாதவ் அருமையாக பந்து வீசினார். பாபர் அசாமை ஆட்டம் இழக்க வைத்த குல்தீப் யாதவின் பந்து வீச்சு அற்புதமாக இருந்தது. இந்த உலக கோப்பை போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சாக இதனை நான் நினைக்கிறேன்.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி எங்களை வீழ்த்தி இருந்தது. அதனை நினைத்து அதிக உணர்ச்சிபூர்வமாக அணுகினால் இந்த ஆட்டத்தின் முடிவு தவறாக கூட போகலாம் என்பதால் பழைய தோல்வியை நினைத்து நெருக்கடிக்கு ஆளாகாத வகையில் தொழில்முறை வீரர்களாக இந்த போட்டியை எதிர்கொண்டது பலன் அளித்தது. புவனேஷ்வர்குமாருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்த 2 அல்லது 3 ஆட்டங்களில் விளையாட முடியாது. காயம் குணமடைந்து போட்டி தொடரின் பிற்பாதியில் அவர் அணிக்கு திரும்புவார். இவ்வாறு விராட்கோலி கூறினார்.

தோல்வி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவிக்கையில், ‘டாஸ் ஜெயித்தது நல்ல விஷயம். ஆனால் நாங்கள் பந்தை சரியான இடங்களில் வீசவில்லை. ரோகித் சர்மா நன்றாக பேட்டிங் செய்தார். அவருக்கு எதிராக நல்ல முறையில் பந்து வீச திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அதனை எங்களால் சரியாக செயல்படுத்த முடியவில்லை. ஆடுகளத்தில் ஈரத்தன்மை இருந்ததால் நாங்கள் 2 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்தோம். எல்லா புகழும் இந்திய பேட்ஸ்மேன்களையே சாரும். பஹார் ஜமான், பாபர் அசாம் நன்றாக ஆடினார்கள். 3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை நாங்கள் இழந்தது திருப்புமுனையை ஏற்படுத்தியது. வேதனை அளிக்கும் இந்த தோல்வியால் கடினமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இனிமேல் வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அரைஇறுதிக்கு முன்னேற முடியும்’ என்றார்.