கிரிக்கெட்

வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை + "||" + South Africa with New Zealand Multiple exams today

வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

வாழ்வா–சாவா கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை
உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி வாழ்வா–சாவா நெருக்கடியில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

பர்மிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணி வாழ்வா–சாவா நெருக்கடியில் இன்று நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

சிக்கலில் தென்ஆப்பிரிக்கா

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா முக்கியமான கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 25–வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து–தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 3 புள்ளியுடன் 7–வது இடத்தில் உள்ளது. அரைஇறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கடைசி 4 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால் அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா–சாவா மோதல் என்பதில் சந்தேகமில்லை. தோற்றால் ஏறக்குறைய நடையை கட்ட வேண்டியது தான்.

தென்ஆப்பிரிக்க அணியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. ஒரே வெற்றியும் குட்டி அணியான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கிடைத்தது ஆகும். பேட்டிங்கில் கேப்டன் பிளிஸ்சிஸ் (ஒரு அரைசதத்துடன் 105 ரன்) குயின்டான் டி காக் (2 அரைசதத்துடன் 186 ரன்) மட்டுமே சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஒருங்கிணைந்து ஜொலித்தால் தான் நியூசிலாந்தின் சவாலை முறியடிக்க முடியும் என்பதை உணர்ந்து ஆட வேண்டியது அவசியமாகும். வேகப்பந்து வீச்சாளர் நிகிடி தசைப்பிடிப்பில் இருந்து குணமடைந்து உடல்தகுதியை எட்டி விட்டார். அவரது வருகை தென்ஆப்பிரிக்காவின் பந்து வீச்சுக்கு புதுதெம்பு அளிக்கும்.

நியூசிலாந்து எப்படி?

இந்த தொடரில் தோல்வியே சந்திக்காத இரண்டு அணிகளில் நியூசிலாந்தும் ஒன்று. 4 ஆட்டங்களில் விளையாடி 3–ல் வெற்றி, ஒரு முடிவில்லை என்று 7 புள்ளியுடன் நல்ல நிலையில் உள்ளது. அந்த வெற்றிப்பயணத்தை நீட்டித்து புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும் முனைப்புடன் நியூசிலாந்து வீரர்கள் தயாராகி வருகிறார்கள். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் நியூசிலாந்து வலுமிக்க அணியாக திகழ்வதால் இவர்களின் கை ஓங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

2015–ம் ஆண்டு உலககோப்பை அரைஇறுதியில் இதே நியூசிலாந்திடம் தான் தென்ஆப்பிரிக்கா தோற்றது. அந்த தோல்விக்கு பழிதீர்க்குமா? அல்லது மீண்டும் அடங்கிப்போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வீரர்கள் விவரம்

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:–

தென்ஆப்பிரிக்கா: அம்லா, குயின்டான் டி காக், மார்க்ராம், பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், டேவிட் மில்லர், பெலக்வாயோ, கிறிஸ் மோரிஸ், ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், ஜேம்ஸ் நீ‌ஷம், கிரான்ட்ஹோம், மிட்செல் சான்ட்னெர், மேட் ஹென்றி, லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வானிலையை பொறுத்தவரை வானம் காலையில் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து–தென்ஆப்பிரிக்கா

3 தரவரிசை 4

இதுவரை நேருக்கு நேர் 70 (முடிவில்லை 5)

24 வெற்றி 41 வெற்றி

உலக கோப்பையில் நேருக்கு நேர் 7

5 வெற்றி 2 வெற்றி