ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது வங்காளதேசம் : வார்னர் 166 ரன்கள் விளாசல்; முஷ்பிகுர் ரஹிம் சதம் வீண்


ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது வங்காளதேசம் : வார்னர் 166 ரன்கள் விளாசல்; முஷ்பிகுர் ரஹிம் சதம் வீண்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:30 PM GMT (Updated: 21 Jun 2019 6:39 AM GMT)

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது.

நாட்டிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் வங்காளதேச அணி ஆஸ்திரேலியாவிடம் போராடி வீழ்ந்தது.

மூன்று மாற்றம்

12-வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் நாட்டிங்காமில் நேற்று நடந்த 26-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்துடன் மோதியது. ஆஸ்திரேலிய அணியில் மூன்று மாற்றமாக ஷான் மார்ஷ், பெரேன்டோர்ப், கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் கவுல்டர்-நிலே, ஆடம்ஜம்பா சேர்க்கப்பட்டனர்.

சிறப்பான தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும், டேவிட் வார்னரும் அடியெடுத்து வைத்தனர். இருவரும் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டியடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி ஆடினர். ஸ்கோர் சீரான வேகத்தில் நகர்ந்தது. வார்னர் 10 ரன்களில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை சபீர் ரகுமான் வீணடித்தார். இந்த பொன்னான வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட வார்னர் அதன் பிறகு சாதுர்யமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் (20.5 ஓவர்) எடுத்து வலுவான அஸ்திவாரம் ஏற்படுத்தி கொடுத்தனர். ஆரோன் பிஞ்ச் 53 ரன்களில் (51 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த உஸ்மான் கவாஜாவும் நிலைத்து நின்று ஆட, ஆஸ்திரேலியா மெகா ஸ்கோரை நோக்கி பயணித்தது. நேர்த்தியாக ஆடிய வார்னர் தனது 16-வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலக கோப்பையில் அவரது 2-வது சதம் (ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன் எடுத்தார்) இதுவாகும். ஆஸ்திரேலியா 34.3 ஓவர்களில் 200 ரன்களை தொட்டது.

வார்னர் 166 ரன்

அதன் பிறகு ஆஸ்திரேலியாவின் ரன்வேட்டை வேகமெடுத்தது. ருபெல் ஹூசைன், ஷகிப் அல்-ஹசன், மோர்தசா ஆகியோரது ஓவர்களில் வார்னர் சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். முஸ்தாபிஜூர் ரகுமானின் ஒரே ஓவரில் கவாஜா 4 பவுண்டரிகளை பின்னியெடுத்தார். அணியின் ஸ்கோர் 313 ரன்களை எட்டிய போது வார்னர் (166 ரன், 147 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்) சவும்யா சர்கார் வீசிய ஷாட்பிட்ச் பந்தை தட்டிவிட்ட போது கேட்ச் ஆகிப்போனார்.

அடுத்து வந்த கிளைன் மேக்ஸ்வெல் சிறிது நேரமே நின்றாலும் ‘வேடிக்கை’ காட்டினார். ருபெல் ஹூசைனின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, 2 சிக்சர் சிதறடித்தார். கவாஜாவும் பவுண்டரி அடிக்க, இந்த ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது. நடப்பு உலக கோப்பையில் ஒரு ஓவரில் திரட்டப்பட்ட அதிகபட்ச ரன்கள் இது தான்.

ஆஸ்திரேலியா 381 ரன்

மேக்ஸ்வெல் 32 ரன்களில் (10 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட் ஆனார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட உஸ்மான் கவாஜாவும் (89 ரன், 72 பந்து, 10 பவுண்டரி) அதே ஓவரில் வீழ்ந்தார். அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் ஒரு ரன்னில் வெளியேறினார்.

49 ஓவர் முடிந்திருந்த போது ஆட்டம் சிறிது நேரம் மழையால் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 381 ரன்கள் குவித்தது. கடைசி 13 ஓவர்களில் மட்டும் அந்த அணி பேட்ஸ்மேன்கள் 163 ரன்கள் சேகரித்தனர். உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவின் 2-வது சிறந்த ஸ்கோர் இதுவாகும். 2015-ம் ஆண்டு உலக கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 417 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக நீடிக்கிறது.

வங்காளதேசம் போராட்டம்

பின்னர் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி வங்காளதேச அணி ஆடியது. பேட்டிங்குக்கு உகந்த இந்த ஆடுகளத்தில் வங்காளதேச பேட்ஸ்மேன்களும் சிரமமின்றி ரன்களை திரட்டினர். அதே நேரத்தில் சீரான இடைவெளியில் விக்கெட்டும் விழுந்தன. தமிம் இக்பால் 62 ரன்னிலும், முந்தைய ஆட்டத்தின் ஹீரோ ஷகிப் அல்-ஹசன் 41 ரன்னிலும் அவுட் ஆனார்கள். விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் மட்டும் நிலைத்து நின்று போராடினார். மக்முதுல்லா (69 ரன், 50 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்) சிறிது நேரம் அச்சுறுத்தினாலும் பலன் இல்லை. ரஹிம் சதம் அடித்தது மட்டுமே அந்த அணிக்கு ஒரே ஆறுதல் ஆகும்.

50 ஓவர்கள் முழுமையாக விளையாடிய வங்காளதேச அணி 8 விக்கெட்டுக்கு 333 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது 7-வது சதத்தை எட்டிய முஷ்பிகுர் ரஹிம் 102 ரன்களுடன் (97 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார்.

6-வது லீக்கில் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு 5-வது வெற்றியாகும். இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அரைஇறுதி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. வங்காளதேச அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.

Next Story