கிரிக்கெட்

தொடர் தோல்வி எதிரொலி: ‘தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றம் வரும்’ கேப்டன் பிளிஸ்சிஸ் தகவல் + "||" + South African squad in action Captain Blissis Information

தொடர் தோல்வி எதிரொலி: ‘தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றம் வரும்’ கேப்டன் பிளிஸ்சிஸ் தகவல்

தொடர் தோல்வி எதிரொலி: ‘தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றம் வரும்’ கேப்டன் பிளிஸ்சிஸ் தகவல்
உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர் தோல்வி எதிரொலியாக தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கேப்டன் பிளிஸ்சிஸ் தெரிவித்தார்.

பர்மிங்காம், 

உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர் தோல்வி எதிரொலியாக தென்ஆப்பிரிக்க அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கேப்டன் பிளிஸ்சிஸ் தெரிவித்தார்.

கவனிக்கப்படாத கேட்ச்

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் பர்மிங்காமில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது. ஆடுகளம் ஈரப்பதம் காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது. அம்லா (55 ரன்), வான்டெர் துஸ்சென் (67 ரன்) அரைசதம் அடித்தனர்.

தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் திண்டாடியது. அதன் பிறகு கேப்டன் கேன் வில்லியம்சனும், காலின் கிரான்ட்ஹோமும் கைகோர்த்து தங்கள் அணியை ஆபத்தில் இருந்து மீட்டெடுத்தனர். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் பக்கபலமாக இருந்தது. கிரான்ட்ஹோம் 14 ரன்னில் ரன்–அவுட்டில் இருந்தும், 22 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்தும் தப்பித்தார். வில்லியம்சன் 76 ரன்களில், இம்ரான் தாஹிரின் சுழற்பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கிடம் பிடிபட்டார். ஆனால் ஏனோ டி காக் அப்பீல் செய்யாததால் மற்ற வீரர்களும் கண்டுகொள்ளவில்லை. டி.வி. ரீப்ளேயில் பந்து அவரது பேட்டின் அடிப்பகுதியில் படுவது தெளிவாக தெரிந்தது. அந்த சமயத்தில் வில்லியம்சன் வெளியேறி இருந்தால் ஆட்டத்தின் போக்கு கூட மாறியிருக்கும். கிரான்ட்ஹோம் தனது பங்குக்கு 60 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்ட போது வில்லியம்சன் சிக்சர், பவுண்டரியுடன் ஆட்டத்தை மூன்று பந்து மிச்சம் வைத்து வெற்றிகரமாக முடித்து வைத்தார். 1999–ம் ஆண்டுக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோற்றதில்லை என்ற பெருமையை நியூசிலாந்து தக்க வைத்துக் கொண்டது. 106 ரன்களுடன் (138 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்த வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

பிளிஸ்சிஸ் விரக்தி

4–வது தோல்வியை தழுவிய தென்ஆப்பிரிக்காவின் அரைஇறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. ஒவ்வொரு உலக கோப்பையிலும் வலுவான அணியாக பங்கேற்பதும், பிறகு முக்கியமான கட்டத்தில் கோட்டை விடுவதும் தென்ஆப்பிரிக்காவின் வாடிக்கை. அந்த சோகம் இந்த உலக கோப்பை போட்டியிலும் தொடருகிறது. தோல்விக்கு பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் 34 வயதான பிளிஸ்சிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:–

தோல்வியால் கடின நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஓய்வறையில் வீரர்கள் எந்த அளவுக்கு வேதனையில் தவிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது. எனக்கு 5 வயது கூடுதலாகி விட்டது போல் உணருகிறேன். எனது உடல் சோர்ந்து போய் விட்டது. முடிந்த வரைக்கும் களத்தில் எங்களது முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி போராடினோம். ஒரு கேப்டனாக வீரர்களிடம் இதற்கு மேல் எதுவும் கேட்க முடியாது.

இம்ரான் தாஹிரின் பந்து வீச்சில் வில்லியம்சனுக்கு பந்து பேட்டில் உரசிச்சென்றதா? என்பது முதலில் எனக்கு தெரியாது. நான் அப்போது சற்று தூரத்தில் பீல்டிங் செய்து கொண்டிருந்தேன். அருகில் நின்ற விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் இதை கவனிக்காமல் விட்டு விட்டார். போட்டி முடிந்த பிறகு தான் பந்து அவரது பேட்டில் பட்டதை நான் அறிந்தேன். வில்லியம்சன் கூட, பேட்டில் பந்து உரசியதை உணரவில்லை என்று தெரிவித்து விட்டார்.

வெளியேறும் வீரர்கள்

இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கவில்லை. அதனால் 260 முதல் 270 ரன்கள் வரை எடுத்தால் போதுமான ஸ்கோராக இருக்கும் என்று விவாதித்தோம். ஆனால் அதற்கு ஏற்ற வகையில் நல்ல பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் 50 அல்லது 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைவதற்குள் விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர். யாராவது ஒரு பேட்ஸ்மேன் சதம் அடித்திருந்தால் கூடுதலாக 15, 20 ரன்கள் வந்திருக்கும். வில்லியம்சனின் பேட்டிங் அபாரமாக இருந்தது. அவர் தான் எங்களது வெற்றி வாய்ப்பை பறித்து விட்டார். உலக கோப்பை போட்டி முடிந்ததும் அனேகமாக 3–4 வீரர்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விலகி விடுவார்கள். அதில் சிலர் கிரிக்கெட்டுக்கு முழுமையாக முழுக்கு போட்டு விடுவார்கள் என்று நினைக்கிறேன்.

அணியை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்வதற்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அணியை முழுமையாக மாற்றம் செய்ய விரும்பலாம். ஆனால் இது குறித்து கலந்து ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். அணியில் உள்ள சில இளம் வீரர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. குறிப்பாக வான்டெர் துஸ்செனிடம் நிறைய திறமை இருக்கிறது. அவரிடம் அணியை வழிநடத்தும் திறமை கூட உள்ளது.

இவ்வாறு பிளிஸ்சிஸ் கூறினார்.