கிரிக்கெட்

இலங்கையிடம் பணிந்தது இங்கிலாந்துமலிங்கா அபார பந்து வீச்சு + "||" + To Sri Lanka Buckled England Malinga Great bowling

இலங்கையிடம் பணிந்தது இங்கிலாந்துமலிங்கா அபார பந்து வீச்சு

இலங்கையிடம் பணிந்தது இங்கிலாந்துமலிங்கா அபார பந்து வீச்சு
உலக கோப்பை கிரிக்கெட்டில், அசுர பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான இங்கிலாந்து சிறிய இலக்கை கூட எட்ட முடியாமல் இலங்கையிடம் பணிந்தது.
லீட்ஸ், 

உலக கோப்பை கிரிக்கெட்டில், அசுர பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றான இங்கிலாந்து சிறிய இலக்கை கூட எட்ட முடியாமல் இலங்கையிடம் பணிந்தது.

அதிர்ச்சி தொடக்கம்

உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று லீட்சில் அரங்கேறிய 27-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கையுடன் மல்லுகட்டியது. இலங்கை அணியில் இரு மாற்றமாக திரிமன்னே, ஸ்ரீவர்தனா நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மென்டிஸ் இடம் பிடித்தனர். ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து கேப்டன் கருணாரத்னேவும், விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும் இலங்கையின் இன்னிங்சை தொடங்கினர். இவர்களை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் நிலைகுலைய வைத்தனர். ஜோப்ரா ஆர்ச்சரின் பந்து வீச்சில் கருணாரத்னே (1 ரன்) விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரிடம் பிடிபட்டார். குசல் பெரேராவை (2 ரன்) கிறிஸ் வோக்ஸ் காலி செய்தார். அடுத்து வந்த அவிஷ்கா பெர்னாண்டோ அதிரடி காட்டினார். ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரே ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் ஓடவிட்டார். அவரது இன்னொரு ஓவரிலும் பவுண்டரி, சிக்சர் விளாசினார். அற்புதமாக ஆடிக்கொண்டிருந்த அவிஷ்கா பெர்னாண்டோ (49 ரன், 39 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) மார்க்வுட் வீசிய ஷாட்பிட்ச் பந்தை தேவையில்லாமல் ‘அப்பர்கட்’ செய்ய முயற்சித்து கேட்ச் ஆகிப்போனார்.

இலங்கை 232 ரன்

இதன் பின்னர் குசல் மென்டிசும், முன்னாள் கேப்டன் மேத்யூசும் கைகோர்த்தனர். ஆனால் ரன்வேகம் மந்தமானது. 23.2 ஓவர்களில் தான் அந்த அணி 100 ரன்களை தொட்டது. இவர்கள் இணைந்து எதிர்கொண்ட 16 ஓவர்களில் 3 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டன. மிடில் வரிசையில் இலங்கை பேட்ஸ்மேன்களை சுழற்பந்து வீச்சாளர்கள் அடில் ரஷித்தும், மொயீன் அலியும் வெகுவாக கட்டுப்படுத்தினர். ரஷித் தனது ஒரே ஓவரில் குசல் மென்டிஸ் (46 ரன்), ஜீவன் மென்டிசுக்கு (0) செக் வைத்தார். இருப்பினும் மேத்யூஸ் கடைசி வரை நிலைத்து நின்று விளையாடி அணி சவாலான ஸ்கோரை எட்டுவதற்கு அடிகோலினார்.

50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 232 ரன்கள் சேர்த்தது. மேத்யூஸ் 85 ரன்களுடன் (115 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தார். உலக கோப்பை போட்டியில் மேத்யூசின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

மலிங்கா கலக்கல்

அடுத்து ஆடிய வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்தும் தடுமாறியது. ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா இங்கிலாந்து தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோ (0), ஜேம்ஸ் வின்ஸ் (14 ரன்) இருவரது விக்கெட்டையும் கபளகரம் செய்தார். முந்தைய ஆட்டத்தில் 17 சிக்சர் அடித்து உலக சாதனை படைத்த கேப்டன் மோர்கனும் (21 ரன்) அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. ஜோ ரூட் (57 ரன்), ஜோஸ் பட்லர் (10 ரன்) ஆகிய அபாயகரமான பேட்ஸ்மேன்களையும் மலிங்கா வீழ்த்த ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதன் பிறகு இலங்கை பவுலர்களின் கை ஓங்கியது. அடுத்த 3 விக்கெட்டுகளை தனஞ்ஜெயா டி சில்வா வரிசையாக வெளியேற்றினார். இதனால் இலங்கை வீரர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மட்டும் போராடினார். ஆனால் அவருக்கு சரியான கூட்டணி கிடைக்கவில்லை. 57 ரன்னில் எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த பென் ஸ்டோக்ஸ் உதனா ஓவரில் 2 சிக்சரும், பிரதீப்பின் பந்து வீச்சில் 2 பவுண்டரியும் துரத்தியடித்து எதிரணியை பயமுறுத்தினார்.

இலங்கை வெற்றி

ஆனால் மறுமுனையில் கடைசி விக்கெட்டாக நின்ற மார்க்வுட் ரன்னின்றி கேட்ச் ஆக, இலங்கை அணி வெற்றிக்கனியை பறித்தது. முடிவில் இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 82 ரன்களுடன் (89 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். 4 முன்னணி விக்கெட்டுகளை கைப்பற்றிய மலிங்கா ஆட்டநாயகன் விருதை பெற்றார். 6-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்துக்கு இது 2-வது தோல்வியாகும். 6-வது ஆட்டத்தில் ஆடி 2-வது வெற்றியை சுவைத்த இலங்கை அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.